சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
குமரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் காசநோய் மருத்துவமனையாக செயல்பட்டு வந்த பகுதியில் 100 ஏக்கர் பரப்பில் தற்போது அரசுமருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பல்வேறு உயர் சிகிச்சைகள் மேற்கொள்ளும் வகையில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரகணக்கான வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு செயல்பட்டு வரும் உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவு (S.S.வார்டு) ஆண் மற்றும் பெண் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் தனிதனியாக உள்ளன. இங்கு சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகி டயாலிசிஸ் மேற்கொள்ளும் நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு அவசர சிகிச்சை பெறுவோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இவ் வார்டில் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக நீர் விநியோகம் தடைபட்டு உள்ளது. இதனால் ஆண் மற்றும் பெண் நோயாளிகள் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இவ் வார்டில் உள்ளவர்கள் பிறவார்டுக்கு இதற்கென செல்ல வேண்டிய நிலையில் உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கும், அவதிக்கும் ஆளாகி வருகின்றனர்.
நவீனமயமாக்கப் பட்டு உயர் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் இம்மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மெத்தனமும், அலட்சியமும் காட்டி வருவதாக நோயாளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அரசியல் வாதிகளின் பரிந்துரை கடிதங்கள் இருப்பவர்களுக்கே சிகிச்சையில் முன்னுரிமை அளிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.அதிலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் நோயாளிகளை அவஸ்தைக்கு உள்ளாக்குவது இவர்களது செயல்பாடுகளை வெளிச்சப்படுத்துவதாக உள்ளது.
கட்டிடங்களும், உபகரணங்களும் மட்டும் இருந்தால் போதாது. தங்களை நம்பி வரும் ஏழை, எளிய நோயாளிகளை மருத்துவர்கள் உரியகவனம் செலுத்தி சிகிச்சை அளித்தால் மட்டுமே சிறப்பு. மாறாக அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றாமல் உள்ளது நோயாளிகள் மீதான வன்முறையாகவே கருத முடியும். எனவே குறிப்பிட்ட உயர் சிறப்பு சிசிச்சை வார்டில் நீரின்றி தவிக்கும் நோயாளிகள் பிரச்னையினை உடனடியாக நிவர்த்தி செய்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply