சமூக பொதுநல இயக்கம் புகார் –
நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலையத்தில் இருந்து அருமநல்லூர் பகுதிக்கு தடம் எண் 4C கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை அருமநல்லூர், ஞாலம், சிற மடம், தெரிசனங்கோப்பு, வீரவநல்லூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் இத்தடம் எண் கொண்ட பேருந்துகள் வராததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இரவு 10.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து அருமநல்லூர் வரும் பேருந்து அங்கு ஸ்டே பஸ்சாக நிறுத்தப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு அருமநல்லூரில் இருந்து நாகர்கோவில் புறப்பட்டு சென்றுவந்தது.இப்பேருந்து இயக்கம் கடந்த ஒரு ஆண்டுகாலமாக நிறுத்தப்பட்டது. இதனால் காலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பிட்ட நேர பேருந்து தடைபட்டதால் அதன் பின் காலை 7 மணிக்கு தான் தொழிலாளர்கள் வெளியூருக்கு செல்லவேண்டிய நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல இயலாததால் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிப்போனது.
அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இத்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இப்பேருந்துகள் வருவதில்லை. இணைந்து வந்து பின் சேர்ந்தே செல்லும் நிலை உள்ளதால் பேருந்திற்காக மணிக்கணக்கில் பயணிகள் காத்திருக்க நேரிடுகின்றது. இதனை தவிர்க்க முன்னர் அருமநல்லூருக்கு வந்துசேர்ந்ததும் பேருந்து நடத்துனர்கள் நேர குறிப்பேட்டில் கையெழுத்து போடும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது இது கைவிடப்பட்டதால் இப்பேருந்துகள் எப்போது வரும்? எப்போது போகும் என்பது சிதம்பர ரகசியம் என உள்ளது.
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு பேருந்தில் பயணிக்க வரும் கிராம மக்கள் குறிப்பிட்ட பேருந்து முன்கூட்டியே செல்வதால் மிகுந்த அதிர்ச்சி அடைவது இப்பகுதி மக்களின் அன்றாட நிகழ்வாகிப்போனது.ஒழுங்குமுறை இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளால் பேருந்துகளில் வருவாய் இழப்பு ஒருபுறமிருக்க பயணிகள் பாதிப்பு மறுபுறம் என இருதரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டு உள்ள போதிலும் போக்குவரத்துத்துறை கண்டுகொள்ளாததால் சகல தரப்பினரும் இன்னலை எதிர்கொள்வது தொடர்கிறது.
எனவே தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் ஏற்கனவே ஸ்டே பஸ் ஆக இயக்கப்பட்ட பேருந்தினை மீண்டும் அதேபோல் செயல்படுத்திடவும், குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன்ஷாகுல் ஹமீது குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி,செயலாளர் P.சந்திரா, தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல், அருமநல்லூர் செயலாளர் S.முருகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply