ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் பகுதிக்கு சுபாஷ்நகர், கண்ணப்பநல்லூர் வழியாக செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இச்சாலை வழியாக ஊரல்வாய்மொழி, மதகநேரி, யாக்கோபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு பேருந்துகள் செல்கிறது. மேலும் ஆவரைகுளம், பெருங்குடி, வடக்கன்குளம், பழவூர், அம்பலவாணபுரம், சிதம்பரபுரம், மாட நாடார் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வோர் இச்சாலையினையே பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி, சிமெண்ட் பேக்கிங் ஆலை, காற்றாலைகள் உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் இம்மார்க்கமாக சென்று வருகின்றனர்.
இச்சாலை காவல்கிணறு – நாகர்கோவில் மற்றும் காவல்கிணறு – கன்னியாகுமரி ஆகிய இரு தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து செல்வதால் குறிப்பிட்ட சாலைகளுக்கு செல்வோரும், கனரக வாகனங்களும் இச்சாலையினையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராயல் பேக்கரி அருகே உள்ள வாகன எடைமேடைக்கு வரும் வாகனங்கள் இச்சாலை வழியாக வந்து நான்குவழிச்சாலைக்கு செல்கின்றன. தினமும் ஏராளமான வாகனங்கள் குறிப்பிட்ட பகுதியை கடந்து செல்லும் நிலையில் இப்பகுதி பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன.
இதனால் குறிப்பிட்ட இடத்தில் சாலையினை தேடவேண்டிய சூழலில் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரும், ஏனைய வாகனங்களும் மிகுந்த சிரமப்பட்டே கடந்து செல்லவேண்டிய பரிதாப நிலை உள்ளது. மழைக்காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி சகதிக்காடாக காட்சி அளிப்பதால் பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாத அவலமே உள்ளது. இதுபோல் கண்ணப்ப நல்லூர், சிமெண்ட் ஆலை அருகே உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை பழுதடைந்து இவ்வழியாக பயணிக்கும் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
பல்வேறு கிராமங்களை இணைக்கும் இப்பிரதான சாலையின் இத்தகைய சீர்கேட்டால் அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டு உள்ள நிலையில் பழுதடைந்த சாலையினை சீரமைத்திட இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் குறிப்பிட்ட சாலை வழியாக படகில் பயணிப்பது போல படாதபாடு பட்டு பரிதவிப்புடன் மக்கள் பயணிக்கின்றனர். எனவே இவர்களது இன்னலை போக்கிடும் வகையில் குறிப்பிட்ட சாலையினை சீரமைத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம் Tஜெகதீஷ், குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் M. மரிய அற்புதம், செயலாளர் Y.ராகுல், ஆரல்வாய்மொழி பேரூர் தலைவர் D.சகாய பிரிட்டோ, அமைப்பு செயலாளர் S.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலாளர்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply