சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஆரல்வாய்மொழியில்கூட்டம் நடத்தும் கொசுக்கள்… குறட்டை விடும் பேரூராட்சி..சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சி கழிவுநீர் கால்வாய்கள் சரிவர சுத்தம் செய்யாத நிலையில் சிறப்புமிக்க அதன் தனித்தன்மையினை இழந்து வருகிறது..அதிக மக்கள் தொகை கொண்டதும், அதிக வருமானம் ஈட்டிவரும் இப்பேரூராட்சி சுகாதார விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவதால் தொற்றுநோய்கள் உருவாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

மலை கிணறு தொடங்கி கணேசபுரம், ஆரோக்கிய நகர், சுப்பிரமணியபுரம் வழியாக வைகை குளத்தில் சென்று சேரும் மழைநீர் கால்வாய் இதன் சுற்றுவட்டார பகுதிகளின் வடிகாலாகவும் திகழ்வதால் இது பிரதான கழிவுநீர் கால்வாயாக உள்ளது.இக்கால்வாய் சரிவர சுத்தம் செய்யப்படாத நிலையில் ஆரோக்கிய நகர் பகுதியில் கழிவுகள் தேங்கி இப்பகுதி கொசுக்களின் கூடாரமாய் காட்சி அளிக்கிறது.

குப்பை கூளங்கள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதோடு இதனால் தொற்றுநோய்கள் உருவாகும் அவலநிலை உள்ளது. இதனால் ஆரோக்கிய நகர் பகுதி மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது. இக்கால்வாயில் கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சரிவர சுத்தம் செய்யப்படாத நிலையில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் கால்வாயில் செல்ல இயலாமல் சாலையில் பாயும் அவலத்தை இக்கால்வாய்கள் எதிர்நோக்கி உள்ளன.

ஆரோக்கிய நகர் பகுதியில் உள்ள கால்வாய் இப்பகுதி மக்களின் கோரிக்கையின் பேரில் கடந்த 14.8.25 அன்று சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் வாரத்திற்கு இருமுறை இப்பகுதி சுத்தம் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் பதில் தெரிவித்து உள்ளது. இருந்தும் இதனை கண்டுகொள்ளாமல் பேரூராட்சி மறந்து போனதால் இப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டால் தவித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டக்கூடாது என்பதை அறிவிக்கும் விதமாய் அறிவிப்பு பலகை உள்ளது. இருந்தும் இதனை கண்டு கொள்ளாமல் இக்கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. சுகாதாரத்தை காப்பதில் பேரூராட்சிக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் பாதிப்பு அடைவதில் இருந்து தடுத்திடும் விதமாய் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் குமரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *