தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர் விடுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வரும் நிலையில் பல்வேறு அரசு மாணவர் விடுதிகள் கைவிடப்பட்டு மூடிய நிலையில் உள்ளன. விடுதிகளில் உணவு, சுகாதாரப்பிரச்னை, மாணவர்கள் நகர்புறங்களுக்கு இடம்பெயர்வு, தனியார் பள்ளிகளுக்கு மாறுதல், போதிய நிதி ஒதுக்கீடு இன்மை என இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம்.
கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கன்னியாகுமரி மாவட்டமும் இதற்கு தப்பவில்லை. இங்குள்ள பல்வேறு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளும் மூடப்படுவது தொடர்கிறது. இதன்படி ஆரல்வாய்மொழியில் திருவள்ளுவர் நகர் அருகே செயல்பட்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவர் விடுதி மூடப்பட்டதால் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது.
நாகர்கோவில் – பறக்கின் கால் பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஆள் அரவமற்ற மயான பூமி அருகே செயல்பட்டு வருவதை ஆரல்வாய்மொழி அரசு மாணவர் விடுதிக்கு மாற்றலாம். அல்லது தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆதரவற்றோர் சமூக மையங்களாக இதனை மாற்றலாம். பணிபுரியும் மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான தங்கும் விடுதியாக மாற்றலாம். இவை எதையுமே செய்யாமல் மாணவர் விடுதி கண்டு கொள்ளப்படாததால் எவ்வித பயனும் இன்றி இக்கட்டிடடம் சேதம் அடைந்து அரசு பணம் விரயம் ஆகும் சூழலே உள்ளது.
தமிழக அரசின் சமூகநலத்துறையின் தரவுகள் 30% விடுதிகள் இவ்வாறு காலியாக கைவிடப்பட்டதாக கூறுகிறது. இதனை மக்கள் நலத்திட்டங்களுக்காக அல்லது மக்கள் பயன்பாட்டிற்கென வழங்கினால் இவை பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதுடன் அழியும் நிலை தடுக்கப்படும். சமூகநலனிற்காக ஏற்படுத்தப்பட்ட இவ்விடுதிகள் பயன்பாடற்ற நிலையில் அழிவதை தடுக்கும் நோக்கத்தில் இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு என வழங்கிட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரிகோட்ட செயலாளர் M அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T.குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E சுரேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் M. மரிய அற்புதம், செயலாளர் Y.ராகுல். ஆரல்வாய்மொழி பேரூர் தலைவர் D.சகாய பிரிட்டோ மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply