குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் 1800 அடி உயர மலையில் உள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தர் கிரி முருகன் கோவில்.
பழனி முருகன் கோவிலின் தெற்கு பகுதியில் அமைந்து உள்ளதாலும் அதன் சிறப்புகளை கொண்டதாகவும் உள்ளதால் இது தென்பழனி என அழைக்கப்படுகிறது. அகத்தியர் மற்றும் போகர் சித்தர்(பழனி முருகன் சிலை உருவாக்கியவர்)இங்கு தவம் இருந்து முருகனை வழிபட்டதாக கூறப்படுகிறது. லாடா சித்தர் போன்ற சித்தர்கள் தியானம் செய்ததால் சித்தர்களின் முக்கிய தலமாக இது கருதப்படுகிறது.
ஆன்மீகத்தலமாக உள்ளதோடு டிரெக்கிங் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்வதால் இத்தலம் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இயற்கையான மலைபாதைகள் வழியாக நடந்தே மலை உச்சியை அடைய வேண்டும். மேகம் முத்தமிடும் மலைமுகட்டில் நின்று பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலைபரப்பு, காற்றாலைகள், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் என கண்கள் காண இயற்கை தனது இறகை விரிக்கும். மனதையும், உடலையும் ஆரோக்கியமாக்க அதிகமான நபர்கள் பல இடங்களில் இருந்தும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இப்பகுதிக்கு வருவோருக்கு எளிதாகவும், இப்பகுதிக்கு மேலும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பக்தர்களை வரவழைக்கவும் இப்பகுதியில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் பழனி, திருச்சி மலைக்கோவில், திருப்பரங்குன்றம், மருதமலை, ஏற்காடு, ராணிப்பேட்டை நரசிம்மர் கோவில்,சென்னை மெரினா பீச் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்டு சில இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல் இப்பகுதியிலும் இத்திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும்.
மேலும் ஆரல்வாய்மொழி சித்தர் கிரிமலை முதல் தோவாளை சித்தர் கிரி முருகன் கோவில் மற்றும் பொய்கை அணை வரையிலும் இத்திட்டத்தினை நீட்டிப்பு செய்யலாம். அத்துடன் இதையொட்டி பல ஏக்கர் நிலங்கள் தரிசாக மலையடிவாரப் பகுதியில் உள்ள நிலையில் அவற்றில் தாவரவியல் பூங்கா அமைப்பதன் மூலம் இப்பகுதி சிறந்த சூழியல் சுற்றுலா தலமாக அமையவும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் இப்பகுதி வளர்ச்சி பெறும். இதனை கவனத்தில் கொண்டு ரோப்கார் திட்டத்தினை இப்பகுதியில் செயல்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா,அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் R.புஷ்பராணி மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply