சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கடலூர் சிப்காட் வளாகம் கடந்த 1971 முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் அபாயகரமான ரசாயனங்களை கையாளக் கூடிய பெரிய சிவப்பு வகை நிறுவனங்களே செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகள் விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் நிலையில் இதன் அருகாமையில் வசிக்கும் கிராம மக்கள் காற்று, நீர் மாசுபாட்டால் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இங்கு வாழ்பவர்களுக்கு 2 ஆயிரம் மடங்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கண்டறியபட்டு உள்ளது. மத்திய மாசுபாட்டு வாரியத்தால் கணக்கிடும் CEPI Score எனப்படும் காற்று மாசுபாட்டில் சிப்காட் வளாகம் மிகவும் மோசமான பகுதியாக அளவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் காற்று மற்றும் நீர் மாசுக்கு பெரிதும் காரணமான கெம்பிளாஸ்ட் எனும் நிறுவனம் தனது ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. மிகவும் அபாயகரமான ரசாயனமான VCM (Vinyl chloride monomer) கொண்டு PVC ரெசின் உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் தனது PVC உற்பத்திதிறனை ஆண்டுக்கு 6 லட்சம் டன்னில் இருந்து 12 லட்சம் டன்னாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது.VCM என்பது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த எளிதில் எரிய கூடிய வேதிப்பொருள். இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய், எலும்புகள் மென்மையாதல், விரல்கள் சிதைவு, தோல் பாதிப்பு, ஆண்மை குறைவு, ரத்த ஓட்ட பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.
குறிப்பிட்ட வேதிப்பொருளை சித்திரப்பேட்டை, ராசாப்பேட்டை, தம்மனாம்பேட்டை, சொத்திக்குப்பம், நடுத்திட்டு, நொச்சிக்காடு வழியாக செம்மான் குப்பத்தில் உள்ள ஆலைக்கு குழாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இக்குழாய் உப்பனாறு வழியாக செல்கிறது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் இதன் மூலம் ஏற்படும் பேரழிவில் இருந்து கிராம மக்கள் தப்பிக்க இயலாது. ஆலையில் இருந்து 10கி.மீ சுற்றளவில் 17332.8 ஹெக்டேர் விவசாய விளைநிலங்கள், 15557.5 ஹெக்டேர் நீர்நிலைகள் உள்ளது. இதனால் விவசாயமும், சுற்றுச்சூழலும் அடியோடு பாதிக்கப்படும் நிலையே உள்ளது.
ஏற்கனவே இந்த ஆலையில் 11 புகைபோக்கிகள் உள்ள நிலையில் இதில் இருந்து வெளியாகும் நுண்துகள்கள், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரோ கார்பன்கள், எத்திலீன் உள்ளிட்ட பல்வேறு நச்சால் மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். ஆலை விரிவாக்கத்தின் போது நிறுவப்படும் 25 புகைபோக்கிகள் மேலும் கடுமையாக காற்றை மாசுபடுத்தும் நிலை உள்ளது.
ஆலை தேவைக்கென 2 கோடி லிட்டர் கடல்நீரை தினமும் எடுக்க திட்டமிட்டு உள்ள நிலையில் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுதன்மை வாய்ந்த கழிவுநீர் உயிர் பன்மயத்தை பாதிக்கும். மேலும் இதனால் இங்குள்ள 43 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 46 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இச்சூழலில் கடந்த 19ந்தேதி ஆலை விரிவாக்கம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மக்கள் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மக்கள் ஆரோக்கியத்திற்கும், சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்கும் இதுபோன்ற திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்க கூடாது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.












Leave a Reply