சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மொரார்ஜி தேசாய் தலைமையில் 1966 ல் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம் மத்திய, மாநில அரசுகளில் முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், குடிமக்களின் குறைகளை களைவதற்கு சில அமைப்புகளை உருவாக்க பரிந்துரைத்தது. இதன்படி லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகள் உருவாக்கிட பிரதமர் இந்திராகாந்தியிடம் ஆணையம் 20.10.1966 ல்அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் இதற்கான சட்டம் 2013ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 16.1.2014 முதல் நடைமுறைக்கு வந்தது.
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013 ன் பிரிவு 63 ன்படி தமிழ்நாடு ஆயுக்தா சட்டம் 2018ல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 21.04.19முதல் நடைமுறைக்கு வந்தது. குறிப்பிட்ட சட்டபடி உருவாக்கப்படும் குழுவில் ஒருதலைவரும் இரு நீதிதுறை உறுப்பினர்களும், இரு நீதிதுறை சாரா உறுப்பினர்களும் இருப்பர். அரசியல் சார்பற்று சுதந்திரமாக செயல்பட்டு பொதுமக்களின் புகார்களை பெற்று அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை ஊழல் மீதான நடவடிக்கை எடுப்பதற்காகவே குறிப்பிட்ட அமைப்பு உருவாக்கப்பட்டது.
அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்களை விசாரிக்க வழி செய்யும் லோக் ஆயுக்தா சட்டம் 2018ல் தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட போது குறிப்பிட்ட சட்டத்தில் போதுமான அதிகாரங்கள் இன்றி நிறைவேற்றப்படுவதாக கூறி எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். லோக் ஆயுக்தா ஜோக் ஆயுக்தா ஆக்கப்பட்டதாகவும் விமரிசனம் செய்தார். இந்நிலையில் அவர் 2021தேர்தல் வாக்குறுதியில் லோக் ஆயுக்தா அமைப்பை முறைப்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் முதல் அதிகாரிகள் வரை குற்றங்கள் விசாரித்து தண்டனை வழங்கப்படும் (வாக்குறுதி எண்.18)என உறுதி அளித்தார்.
ஆனால் ஆட்சிக்காலம் முடிவடைய ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இதுவரை இவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதுபோலவே மக்களுக்கு தேவையான அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் கிடைக்க சேவை உரிமை சட்டம் இயற்றி செயல்படுத்திடுவேன் (எண் 19) ஊழல் செய்வோர் மீது சட்டவிதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் (எண்.20) ஆகிய ஊழலுக்கு எதிரான வாக்குறுதிகளும் இதுவரையில் நிறைவேற்றப்படாமல் வாக்குறுதிகளாகவே உள்ளன.
இதுபோன்ற சட்டங்கள் பாரபட்சமின்றி செயல்படுத்தப்பட்டால் ஜனநாயகம் உறுதிபடுவதோடு நீதி நிலைநாட்டப்படும். ஆனால் FlR போடும் அதிகாரம் கூட இல்லாத இத்தகைய அமைப்பால் மக்களுக்கான பலன் என்பது கேள்விகுறியாகவே உள்ளது. ஆளும்கட்சிகள் விருப்பபடி நிர்வாகிகள் நியமிக்கப்படும் நிலையில் அரசு செய்யும் ஊழல் மீது இவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.கர்நாடகாவில் லோக் அயுக்தா மூலம் முன்னாள் முதல்வர். எடியூரப்பா சிறை செல்ல நேர்ந்தது. இதுபோல் அல்லாது பல் இல்லா புலியாய், அட்டை கத்தியாய் தமிழகத்தில் லோக் அயுக்தா சட்டம் உள்ளது. இதனை தேர்தல் வாக்குறுதிபடி தமிழக முதல்வர் செயல்படுத்தி ஊழல் ஒழிப்பை உறுதி செய்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply