சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாடு முக்கியமான இயற்கை வளங்கள் கொண்ட பகுதியாகும். மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள், கனிமங்கள் உள்ளிட்டவை தீவிரமாக சுரண்டப்படுவதால் சுற்றுசூழல் சீரழிவு, நீர் பற்றாக்குறை, உயிரினங்கள் அழிவு, வாழ்வாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி உள்ளோம்.
அதானி நிறுவன துறைமுகத்திற்காக குமரி மலைகள் கொள்ளை போவதும், 1069 கி.மீ கொண்ட தமிழக கடற்கரையில் 14 கடற்கரை மாவட்டங்களில் தாதுமணல் கொள்ளையால் கடல் அரிப்பு ஏற்படுவதும், ஒரு நாளைக்கு மட்டும் 1 லட்சம் டன் கனிமவளங்கள் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு தாரை வார்ப்பதும், தமிழகம் முழுவதும் கட்டுப்பாடின்றி கல்குவாரிகள் செயல்படுவதும் நாம் கண்டும் மௌனமாய் கடக்கின்றோம்.
இதன் மூலமாய் மலைகள் அழிவு, காடுகள் அழுத்தம், ஆறுகள் சேதம், உயிரினங்கள் (புலி, யானை உள்ளிட்ட) அழிவு, காலநிலை மாற்றம் என பல்வேறு சுற்றுசூழல் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றோம். நமது அகோர சுயநலப் பசிக்கு இயற்கை வளங்களை இரையாக்கி வரும் நம்மால் ஒரு அங்குல உயரமலையினையாவது உருவாக்கிட இயலுமா?
இயற்கை வளங்கள் நமது எதிர்காலத்தின் அடித்தளம். இதுபோல வளக் கொள்ளை தொடர்ந்தால் பேரழிவு நிச்சயம். இதனால் இத்தகைய பாதிப்புகள் நிகழாமல் தடுத்திடுவதில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. இதனை கருத்தில் கொண்டு சமூக பொதுநல இயக்கம் 2026 ஆண்டின் முக்கிய அறைகூவலாகவும், அடிப்படை பணியாகவும் இயற்கை வளங்களை காக்கும் நோக்கத்தில் பணிகளை முன்னெடுக்கும்.
இதையொட்டி தமிழக அளவில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வளக் கொள்ளைக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரங்களையும், பணிகளையும் இயக்கம் மேற்கொள்ளும்.
இயற்கை வளங்களை காக்க…
தமிழக நலன்களை மீட்க..
கரம் கோர்ப்போம்..
களம் காண்போம்..
வாருங்கள்…தோழர்களே…
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.















Leave a Reply