தங்க நாற்கர சாலைத்திட்டம் கடந்த 2004ல் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏனைய பகுதிகளில் பணிகள் முடிவடைந்த நிலையில் தொடங்கிய பகுதியில் மட்டும் நாற்கரச்சாலை பணிகள் முடியாமல் உள்ளது. கடந்த 2023ல் காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரையிலான பணிகள் முடிந்து பயன்பாட்டில் உள்ளது. ஆனால் கன்னியாகுமரி முதல் காரோடு வரையிலான 54கி.மீ தூரப் பணிகளில் 30கி.மீ தொலைவிற்கு இன்னும் பணிகள் ஆங்காங்கே முடிவடையாத நிலையில் உள்ளது.
குமரி மாவட்டம் அதிகமான நீர்நிலைகளை கொண்ட மாவட்டம் என்பதால் இவற்றிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாலங்கள் அமைத்து நான்குவழிச்சாலை அமைத்திட வேண்டும் என நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் வலியுறுத்தி உள்ளது. இதன்படி குறிப்பிட்ட சாலையில் 31 பெரிய பாலங்களும், 37 சிறு பாலங்களும் 5 குறு பாலங்களும் 191 நீர்வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கென கூடுதலாக மத்திய அரசு ரூ 1041 கோடியே 30 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை நீர்நிலைகளை மூடி நிர்மூலமாக்கி வருகிறது.
இரணியல் அரச மூட்டுகுளம், சடையமங்கலம் பிள்ளாத்தி குளம், மணக்கரை பாம்பாட்டிகுளம், தோட்டியோடு நாச்சிமார் குளம், காஞ்சிரங்குளம், அம்பலத்தடி குளம், குதிரை பாஞ்சான்குளம், காஞ்சிரங்கோடு ஆண்டார்குளம், தோட்டியோடு பிள்ளை குளம், ஆளூர் செல்லங்குளம், சுங்கான்கடை பள்ளன்குளம், கொறக்குளிகுளம், சுசீந்திரம் பிரமதன் குளம், வழுக்கம்பாறை புற குளம், பொற்றையடி தாணுமாலையன்குளம், கொட்டாரம் தேவர்குளம், கன்னியாகுமரி பண்ணி குண்டு குளம், காப்புக்காடு தாமரைகுளம், நட்டாலம் பெரியகுளம், திருவிதாங்கோடு மாம்பள்ளிகுளம் என 100க்கும் மேற்பட்ட பாசன குளங்கள், பாசன கால்வாய்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பட்டணங்கால்வாய் இதுவரை எவ்வித சேதாரம் இன்றி செயல்பட்டு வந்தது. பள்ளியாடி பகுதியில் இக்கால்வாய் உடைக்கப்பட்டு பின்னர் கட்டப்பட்ட தரமற்ற கட்டுமானங்களால் நீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு பல பகுதிகளிலும் நடைபெறும் இத்தகைய சட்டவிரோத பணிகளால் நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுசூழல் சமநிலை சீர்குலைந்து உள்ளது. எனவே நீர்நிலைகளும், பாசன கால்வாய்களும் பாதிப்பு ஏற்படாதவாறு நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, துணைத்தலைவர்கள் S.ஜேசுராஜ், பேரா. C. மோகன், துணைச் செயலாளர் M.கேதரின் பேபி அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் E.சுரேஷ், விவசாய அணிச் செயலாளர் N.கிருஷ்ணன், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் D.தேவதாஸ், திருவட்டார் ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply