சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளுக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் கட்டாய தமிழ் பாடத் தேர்வை கடந்த 2022 முதல் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. இதன்படி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 1996 முதுகலை ஆசிரியர் காலிப்பணி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் 12 ந்தேதி தேர்வு நடத்தியது. இதில் 2.36 லட்சம் பேர் எழுதிய தேர்வின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகி கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
TRB விதிகளின்படி தமிழ்மொழி பாடத்தில் 50 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண் (40%) பெற வேண்டும். இதில் தோல்வி அடைந்தால் மீதி பாடங்கள் திருத்தப்படாது. இந்நிலையில் தமிழ் பாட தேர்வில் 85 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வர்கள் 20 மதிப்பெண் கூட பெறாமல் தோல்வி அடைந்து உள்ளது தாய்மொழி திறன் குறைபாட்டை வெளிச்சப்படுத்தி உள்ளது.
தேர்வர்களில் பெரும்பாலான நபர்கள் முதுகலை கல்வியியல் பட்டங்களுடன் எம்.பில் / பி.எச்.டி வரை படித்தவர்கள். தேர்வில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான தமிழ் பாட புத்தகத்தில் இருந்து இத்தேர்வில் கேள்விகள் கேட்கப்பட்டும் இவர்களால் அதில் வெற்றி பெறாதது பல கேள்விகளை எழுப்புகிறது.ஆசிரியர்களே இத்தகைய கற்றல் குறைபாடுகளுடன் இருப்பின் இவர்கள் எப்படி தகுதியான மாணவர்களை சமுதாயத்திற்கு உருவாக்கி கொடுப்பார்கள்?
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து தேர்வில் பங்கேற்று தோல்வி அடைபவர்கள் பணி இடங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவதால் ஏற்கனவே தமிழக பள்ளிகளில் 12000 காலிபணி இடங்கள் உள்ள நிலையில் மேலும் காலிபணி இடங்கள் உருவாகி மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தாய்மொழியை வளர்ப்பதாய் முழக்கம் செய்பவர்கள் நிதர்சனத்தை உணர்ந்து உள்ளபடியே மொழி வளர்ச்சிக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தாய்மொழியினையே கல்லாமல் கல்லூரி கல்வி வரை பயில இயலும் என்பது மொழிக்கு மட்டுமல்ல நமது நாட்டிற்கே ஏற்பட்ட அவமானம். இதில் இருந்து நம் கல்விமுறை எந்த அளவில் மோசமாக உள்ளது என்பதை உணர்ந்து பள்ளிகளில் தமிழை கட்டாய பாடம் ஆக்குவதோடு மாணவர்களின் தமிழ்திறனை மேம்படுத்திட புதிய திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். தோல்வியில் இருந்து தொடங்குவோம் புதிய முயற்சிகளை..
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply