குமரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரானது பழையாறு, வள்ளியாறு, தாமிரபரணி என்ற மூன்று ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. இவற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் பல ஆயிரகணக்கான குளங்களுக்கு நீர் திருப்பி விடப்படுவதால் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படுவதோடு, விவசாயமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் இந்த ஆறுகள் மற்றும் சிற்றாறுகளில் தடுப்பணை கட்ட வாய்ப்புகள் இருந்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மழைநீர் வீணாக கடலில் கலக்கும் நிலையே தொடர்கிறது. இது ஒருபுறமிருக்க நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் குமரி மாவட்டத்தில் அதன் சாட்சியாக காட்சி அளிக்கும் தடுப்பணைகள் உரிய பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது.
குறிப்பாக பழமைவாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையில் வடமேற்கு திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ பயணித்து அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் வீரப்புலி அணை, பள்ளிகொண்டான் அணை, செட்டி தோப்பு அணை, வீரமங்கலம் அனை/ சபரி அணை, குமரி அணை, சோழன் திட்டை அணை, பிள்ளை பெத்தான் அணை, மிஷன் அணை உள்ளிட்ட 13 தடுப்பணைகள் உள்ளன. இதன்மூலம் 97 குளங்கள் பாசன வசதி பெறுவதோடு 15 ஆயிரத்து 82 | ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இத்தகைய தடுப்பணைகள் . சோழர், பாண்டியர் மற்றும் சேர மன்னர்கள் ஆட்சிகாலத்தின் போது கட்டப்பட்டவையாகும்.
கி.பி.900ல் பாண்டிய மன்னனான இராஜசிம்மன் ஆட்சிகாலத்தில் பாண்டியன் அணை கட்டி பறளியாற்றின் நீரை பழையாற்றுக்கு திருப்பியதும் வேணாட்டு மன்னர் உதயமார்த்தாண்டவர்மா வீரப்புலி அணையை கட்டியதும் வரலாற்று சான்றுகள் புலப்படுத்துகின்றன. இவ்வாறு தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட தடுப்பணைகள் உரிய பராமரிப்பின்றி பாழடைந்து பரிதாப நிலையில் காட்சி அளிக்கின்றன. விவசாயத்திற்கு மட்டுமில்லாது நீரின் வேகத்தை குறைப்பதிலும் இவை பெரும்பங்காற்றி வரும் நிலையில் இவை கவனிப்பாரின்றி அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இத்தகைய தடுப்பணைகளை பாசன பாரம்பரிய சின்னங்களாக அறிவித்து அதன் பாதுகாப்பினை உறுதிபடுத்திட வேண்டும். மேலும் தடுப்பணைகளில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தின் நீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பெரும்பங்காற்றி வரும் தடுப்பணைகளை அழியாமல் காத்திடவும், தொடர்ந்து பராமரிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம் T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், சுற்றுசூழல் பாதுகாப்பு அணிச் செயலாளர் C.V.முருகன், மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய், விவசாய அணிச் செயலாளர் N.கிருஷ்ணன், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அமைப்பு செயலாளர் R.முத்துகுமார் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply