சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
அணுமின்சக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் அணுசக்தி சட்டம் 1962 மற்றும் அணு விபத்து இழப்பீட்டு சட்டம் 2010 போன்றவற்றில் திருத்தம் கொண்டுவரப்படும் என பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதரராமன் தெரிவித்து இருந்தார். ஆபத்தான இந்த அறிவிப்பிற்கு சமூக பொதுநல இயக்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் அணுசக்தி துறையினை தனியாருக்கு தாரைவார்க்கும் மசோதா (Atomic Energy Bill 2025) நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதன்படி தனியார் நிறுவனங்கள் அணுஉலைகளை அமைத்து இயக்க முடியும்.தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில் செலவை குறைக்க முயலும்போது பாதுகாப்பு தரங்களை தளர்த்தலாம். அல்லது பராமரிப்பை புறக்கணிக்கலாம். செர்னோபில் (1986) புகுஷிமா (2011) போன்ற பகுதிகளில் அரசே கையாண்டும் பேரிடர் பாதிப்புகளை தடுக்க முடியவில்லை. தனியார் தலையிட்டால் நிலைமை இன்னும் மோசமாகலாம்.
அணுஉலை கட்டுவது, இயக்குவது, கழிவுகளை அகற்றுவது என அனைத்தும் மிக அதிக செலவு பிடிப்பதாகும். தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்றால் மலிவான உபகரணங்கள்/ குறைந்த ஊதியத்தில் ஊழியர்கள் என சமரசம் செய்தாக வேண்டும். இது நீண்டகால ஆபத்திற்கே வழிவகுக்கும். அணு எரிபொருள் செலவிடப்பட்ட பிறகு உருவாகும் கதிரியக்க கழிவுகள் மில்லியன் ஆண்டுகள் ஆபத்தானவை. இந்தியாவில் இக்கழிவுகளை கையாள இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத நிலையில் மேலும் சேகரமாகும் கழிவுகள் நமது அழிவுக்கு நாமே அஸ்திவாரம் போடுவதாகவே அமையும்.
யுரேனியம் செறிவூட்டல், புளுடேனியம் உற்பத்தி அணு ஆயுதங்களுக்கு பயன்படுத்தப் படும் நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் இதனை தவறாக கையாண்டால் நமது தேச பாதுகாப்பே கேள்விகுறியாகும். அணுஉலை விபத்து ஏற்பட்டால் யார் தருவது? குறிப்பிட்ட நிறுவனங்கள் திவாலானால் ஓடிவிடும் அல்லது Limited Liability சட்டங்களை காட்டி தட்டி கழிக்கும். இறுதியில் அரசும் மக்களும் தான் பாதிப்பை ஏற்க வேண்டும். உலகில் வெற்றிகரமாக அணுஉலைகளை செயல்படுத்தும் பிரான்ஸ், ரஷ்யா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் அரசே முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் இந்தியா தனியாருக்கு அனுமதிப்பது மிகமிக ஆபத்தானது.
டெல்லியில் நிலத்தடி நீரில் கதிரியக்க அணுக்கள் உள்ளது. பீகாரில் தாய்பாலில் கூட கதிரியக்க யுரேனியம் கண்டறியபட்டு உள்ளது. ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், ஆந்திராவில் நிலத்தடி நீரில் ஆர்சனிக் விஷம் உள்ளதாக தெரியவந்து உள்ளது. இது எல்லாம் இயற்கை வளங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு வாரி கொடுத்ததால் ஏற்பட்டதின் விளைவுகள். இந்த நிலையில் லாபம் ஈட்டும் தொழிலாக பார்க்க கூடாத/ஆபத்து மிக்க/தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அணுசக்திதுறையில் தனியாருக்கு அனுமதி அளிப்பது கார்பரேட் நிறுவனங்களுக்காக சொந்த நாட்டு மக்களையே பலியிடுவதற்கு சமமானதாகும்.எனவே சுற்றுசூழலுக்கும், மக்கள் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் இம்முடிவினை கைவிட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply