சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர் நாகப்பட்டினம், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ உயிரியல் கழிவுகளை (Bio-medical waste) அழிப்பதற்காக இப்பகுதியில் ஆலை தொடங்கிட தனியார் நிறுவனம் அரசின் அனுமதியை எதிர்நோக்கி உள்ளது.
இந்த ஆலை செயல்படுமானால் தங்களது விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும் சுற்றுசூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் கிராம மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 11 அக் 2025ல் நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.மருத்துவ கழிவு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிசானத்தூர், துருசுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மெய்க்குடிப்பட்டி, அக்கச்சிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலை அமைக்க திட்டமிட்டு உள்ள இடத்தை ஒட்டி பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய விளைநிலங்கள் உள்ளன. இதனால் காற்று, நிலம்,நீர் மாசுபாட்டால் இப்பகுதி கிராம மக்கள் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். கந்தர்வகோட்டைக்கு குடிநீர் இங்கிருந்து வழங்கப்படும் நிலையில் அது தடைபடும். இப்பகுதியில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட இப்பகுதியில் நாசகார இத்தகைய ஆலைக்கு அனுமதி வழங்கக்கூடாது.
விருதுநகர் மாவட்டம் ஏ.முக்குளம் பகுதியில் இதே போன்று தனியார் நிறுவனம் மூலம் 2006 ல் மருத்துவ கழிவு ஆலை தொடங்கப்பட்டது. இதனால் இதன் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கடுமையாக சிறுநீரகம், இதயம், கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளானதோடு புற்றுநோய், ஆஸ்த்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகினர். இதையடுத்து இப்பகுதி மக்களின் கடுமையான போராட்டத்திற்கு பின் 2013ல் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் மீண்டும் ஆலை இயங்கியது. தற்போது கடந்த செப்டம்பர் மாதம் அரசின் நடவடிக்கையின் படி கட்டுமானப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இது வாழும் உதாரணமாக உள்ள நிலையில் இத்தகைய ஒரு நிலை பிசானத்தூர் மக்களுக்கும் ஏற்பட வேண்டுமா?
மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் CPCB படி உயிரியல் மருத்துவ மற்றும் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் அதிக அளவு மாசுபாட்டை ஏற்படுத்துவதால் இவற்றை சிவப்பு வகை தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ வசதிகளை பொருத்தமட்டில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருப்பினும் அதன் கழிவுகளை மேலாண்மை செய்வதை கண்டு கொள்ளாமல் உள்ளது. இதனால் கேரள மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதும், நீர்நிலைகள், சாலைகளில் மருத்துவ கழிவுகளை விட்டு செல்வதும், தனியார் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அவற்றில் கழிவுகளை கொட்டுவதும் தொடர்நிகழ்வாக உள்ளது. மக்களும் , சுற்றுசூழலும், உயிரினங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், விவசாயமும் பாதிப்பு ஏற்படும் நிலையில் மருத்துவ கழிவு தொடர்பாக அரசு கூடுதல் அக்கறை கொள்தல் மற்றும் நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply