சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலூர், பாச்சலூர், பேத்துப் பாறை, அடுக்கம், மன்னவனூர், கே.சி.பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, குறுமலை, கன்னிவாடி, வடமதுரை, குஜிலியம்பாறை, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொல்லியல் சின்னங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். ஆதி மனிதர்கள் வாழ்ந்த எச்சங்கள், பாறை ஓவியங்கள், முதுமக்கள் தாழி, கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், கற்திட்டுகள், வணிகம் சார்ந்த கல்வெட்டுக்கள், ஆதிகால மனிதர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் உள்ளிட்டவை இங்கு அதிகமாக காணலாம்.
குறிப்பாக தாண்டிக்குடி பகுதியில் கி.மு 1200 முதல் கி.பி 500 வரையிலான இரும்பு காலத்திற்கு முந்தைய புராதன பகுதிகள் உள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்பாறை கல்லறைகள் (Dolmens) நீளமான குகைகளுடன் கூடிய புதைகுழிகள் (Cist) சுமார் 100க்கும் மேற்பட்ட கற்கள் மற்றும் வழிபாட்டு இடங்கள் (பிளேனியர் ஸ்டோன்ஸ்) கல்பதுகை (Stone slab) தமிழ்நாட்டின் பழங்கால வரலாற்றை வெளிப்படுத்துவதாய் உள்ளன. இங்கு 2005ல் தமிழக அரசின் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட சின்னங்கள் கற்காலத்தை சேர்ந்தவை.
தொன்மை வாய்ந்த இச்சின்னங்கள் யாவும் பராமரிப்பின்றி, பாதுகாப்பின்றி அழிந்து பாழாகி வருகின்றன.. இதன் மகத்துவம் தெரிவிக்கப்படாமலே இவை மறைந்து போகின்றன. இயற்கை சீற்றங்களினாலும், மனித செயல்பாடுகளாலும் இந்த வரலாற்று கருவூலம் தங்கள் வாழ்நாளை இழக்கும் நிலையில் உள்ளன. அகழாய்வில் கிடைத்த பொருட்கள் ஹரப்பா காலத்துடன் தொடர்பு உடையவை என கூறப்படுகிறது.இதன்மூலம் இப்பகுதி முக்கிய வணிக மையமாக இருந்து வந்தது தெரியவருகிறது.இதுபற்றி ஆய்வு செய்தால் நாம் அறியாத தகவல்கள் தெரிய வரலாம்.
தமிழ்நாட்டில் 92 தொல்லியல் சின்னங்கள் (2013 தணிக்கை அறிக்கையின் படி) இடம் கூட. தெரியாமல் மறந்து போனது.தொல்லியல் துறையின் பட்டியலில் தாண்டிக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் சின்னங்கள் இதுவரை பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சி கலந்த உண்மையாகும். இதனால் இங்குள்ள பழம்பொருட்கள் எதிர்கால சமுதாயத்திற்கு தெரியாமலே இறந்தகாலத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
தமிழ்நாட்டின் பழங்கால வரலாறு, பண்பாடு, தொன்மம், கலாச்சாரம், வணிகம், வாழ்வியல், கலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்தும் வேராக நம்மிடம் எஞ்சி இருக்கும் கால கருவூலத்தை காக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். இவற்றை தமிழக அரசு பராமரித்து பாதுகாப்பதுடன் இப்பகுதியின் முக்கியத்துவத்தையும், வரலாற்றையும் அனைவரும் தெரிந்து கொள்ள செய்திடும் வகையில் இப்பகுதிகளை தொல்லியல் சுற்றுலாத் தலமாக அறிவித்திட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.















Leave a Reply