சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 38 மாவட்டங்களில் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர பொறியியல், மருத்துவம், பி.எல் உட்பட தொழிற்படிப்புகளுக்கு பதிவு செய்ய மதுரை, சென்னையில் தனி அலுவலகமும், மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்ய சென்னையில் தனி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. அரசுப்பணிக்கென மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்து வந்த நிலையில் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்தவர்களுக்கு அரசுப்பணி கிடைத்தது.
அதன்பின் இந்நிலை மாறி அரசு பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம்/கூட்டுறவு பொது தேர்வாணையம், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் என அனைத்து துறைகளுக்கும் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டது.இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வெறுமனே வேலைவாய்ப்பற்றோர் பதிவு செய்யும் மையமாக மாறிப்போனது. இத்தகைய நிலையினால் இங்கு பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து போனது. கடந்த காலங்களில் 80 லட்சமாக இருந்த பதிவு எண்ணிக்கை 2023 ல் 64 லட்சமாகவும் 2024ல் 50.14 லட்சமாகவும் 2025ல் 30 லட்சத்து 5786 ஆகவும் நலிந்து போனது. வேலைவாய்ப்புத் துறை பயனற்ற நிலையில் அதில் பதிவை புதுப்பிக்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.
இதனால் வேலை வாய்ப்புத் துறையில் பணிபுரியும் பலரும் வேலை இல்லாமல் வேலை பார்த்து வருகின்றனர்.மண்டல இணை இயக்குனருக்கு மாதம் 2 லட்சம், இளநிலை அலுவலருக்கு 70 ஆயிரம், உதவியாளருக்கு 50 ஆயிரம், தட்டச்சருக்கு 35 ஆயிரம், சுருக்கெழுத்து தட்டச்சருக்கு 35 ஆயிரம் சம்பளம்/ எரிபொருள்/ பயணப்படி/இதர செலவுகள் என மாதந்தோறும் இதனால் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஒரு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவினம் ரூ 4 லட்சம் என கணக்கிட்டால் 38 மாவட்டத்திற்கு மாதம் ரூ 1.52 கோடி செலவிடப்படுகிறது.
இவ்வாறாக மக்களது வரிப்பணம் இத்துறை மூலம் விரயமாகி வருகிறது. கடந்த 2019 ஜூலை 30 ல் வெளியிட்ட அரசாணைப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட்டது. இத்துறை மூலம் 2021-25 வரை ரூ 3.04 கோடி செலவு செய்யப்பட்டு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு தரகு வேலை பார்ப்பதற்கும்/ தொழில் குறித்த கவுன்சில் செய்வதற்கும் தான் இத்துறை பயன்பட்டு வருகிறது.
அரசுத் துறை பணியாளர்கள் மெல்ல மெல்ல தனியார் மயத்திற்கும், ஒப்பந்தத்திற்கும், தினக்கூலிக்கும் மாற்றப்பட்டு வரும் நிலையில் பணவிரயம் செய்யும் இத்துறை தேவையா? என்னும் கேள்வி எழுகிறது.அரசே மதுவிற்பனையை செய்வதற்கு ஒரு துறையை நிறுவி மதுவிலக்கு என்னும் துறையினையும் நிறுவியது போல் வேலைவாய்ப்புகளை வழங்காமல் அதன் பெயரில் மட்டும் ஒரு துறையை செயல்படுத்துவது நகைமுரணாகவே உள்ளது. ஒருபுறம் பல லட்சம் காலிபணி இடங்கள் நிரப்பபடாத நிலையில் மறுபுறம் காலியான… பணி இடம் உள்ளது களையப்பட வேண்டும். மக்கள் பணம் விரயம் ஆவது தடுக்கப்பட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply