சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்தனர். இதையடுத்து கூட்டங்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுத்தியதின் பேரில் அரசு புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான பரிந்துரைகளை வகுத்து உள்ளது. இதில் ரோடு ஷோ தடை தொடர்பாக எவ்வித விதிமுறைகளும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.
சமீப காலமாக ரோடு ஷோ என்ற பெயரில் சிறு மற்றும் பெரு நகரங்களில் மக்கள் நடமாட்டம் உள்ள கடைவீதிகளிலும், சாலைகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை சந்திப்பதும், பிரச்சாரம் மேற்கொள்வதும் வழக்கமாகிப் போனது. இதனால் பல மணிநேரம் போக்குவரத்து தடை படுவதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இதற்கென பல மணிநேரம் மக்கள் வெயிலிலும், சிரமத்திலும் தவிப்பதோடு கூட்ட நெருக்கடியினால் மரணத்தை சந்திக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் மக்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும், கூட்டத்தில் பங்கேற்போர் எவ்வித துன்பங்களையும் சந்திக்காமல் இருக்க பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அதற்கென தனி இடங்களை ஒதுக்கலாம்.
தற்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பினை உருவாக்கிடும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சாலையினை தங்கள் விளம்பர மேடையாகவும், பிரச்சார களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். சாலை என்பது மக்கள் பயன்படுத்தும் பகுதி. அதனை தேர்தல் மேடையாக்க வேண்டாம். இதுபோல் சாலைகளில் வைக்கப்படும் ஒலி பெருக்கிகளால் உடல் பலகீனம் உள்ளவர்கள் பாதிப்பதோடு ஒலிமாசும் ஏற்படுகிறது. பல்வேறு விபத்துகளுக்கும் இது காரணமாகிறது.
தற்போது தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பிரச்சாரத்தை மக்களிடம் எளிதில் கொண்டு செல்ல இயலும். அதற்கு ஏற்ப வேட்பாளர் செலவினத்தை குறைத்திடும் வகையிலும், மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும் பிரச்சார உத்திகளை மாற்றலாம். எல்லா கட்சிகளும் தங்கள் வாக்குறுதிகளை மக்களுக்கு ஊடகம் வழியாக தெரிவித்திட தேர்தல் ஆணையம் உரிய வழிவகை செய்திட வேண்டும். மக்களின் உயிருக்கும், நலனிற்கும், சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் கேடு விளைவிக்கும் ரோடு ஷோ நடத்திட தடை விதிக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply