சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கழிவுநீர் கலப்பால்பாழாகிப் போன பழையாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தில் பழமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ பயணித்து மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் வீரப்புலி அணை, பள்ளிகொண்டான் அணை, செட்டித்தோப்பு அணை, வீரமங்கலம் அணை, சபரி அணை, குமரி அணை, சோழன் திட்டை அணை, பிள்ளை பெத்தான் அணை, மிஷன் அணை உள்ளிட்ட 13 தடுப்பணைகள் உள்ளன. இதன்மூலம் 97 குளங்கள் பாசன வசதி பெறுவதுடன் 15 ஆயிரத்து 821 ஏக்கர் நிலங்கள் பயன் அடைகின்றன.

பல்வேறு கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய தேவையினை பூர்த்தி செய்வதால் விவசாயிகளின் ஜீவனாகவும் விளங்கும் பழையாறு தன் பெருமைகளை இழந்து களை இழந்து காட்சி அளிக்கிறது. மருத்துவமனை கழிவுகள், குப்பைகள் இந்நீரில் கொட்டப்படுவதோடு, நாகர்கோவில் மாநகரின் கழிவு நீர் இந்த ஆற்றிலேயே சங்கமிக்கிறது. இதனால் இந்நீர் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய்கள் உருவாகும் பிறப்பிடமாகவும் மாறிப்போனதால் மக்கள் இந்நீரை பயன்படுத்த அஞ்சும் நிலையே உள்ளது.

பழையாற்றில் உள்ள பல்வேறு தடுப்பணைகளின் மதகுகள் துருபிடித்த நிலையில் போதிய நீரை தேக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பழையாற்றின் மூலம் 4925 மில்லியன் கனஅடி நீர் கடலில் கலக்கும் அவலம் தொடர்கிறது. இதனால் ஆற்றில் நீர் இருப்பினும் குளங்களுக்கு சென்று சேராத நிலையினால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தேர்தல் காலங்களில் பழையாறை சொல்லி ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள் அதன் பின் மறந்துபோவதால் பழையாறு விமோசனம் பெறாத நிலையில் விடியலை எதிர்நோக்கி உள்ளது.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில், கிருஷ்ணசுவாமி கோவில், அழகம்மன் கோவில்களின் சுவாமி விக்கிரகங்கள் பழையாற்றில் நீராடி ஆறாட்டு நிகழ்வினை நடத்தியது உண்டு. ஆனால் இன்றோ ஆகாய தாமரைகளின் பெருக்கத்தாலும், பலரின் ஆக்கிரமிப்பாலும் பழையாறு பராமரிப்பு இன்றி பாழாய் போனது. குமரியின் கூவமாய் காட்சி அளிக்கும் இப்பழையாறு ஆக்கிரமிப்புகளின் பிடியில் இருந்து காத்திடவும், கழிவுநீர் கலவாமல் தடுத்திடவும், ஆகாய தாமரைக்குள் மூழ்கி உள்ள பழையாறு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

Public welfare group filing complaint over river pollution
Environmental activists inspecting sewage contamination in Pazhayaru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *