சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஆரல்வாய்மொழியில் கட்டப்பட்டு ஒருவருடத்தில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்- கேள்விக்குறியான மாணவர் பாதுகாப்பு -சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழியில் முக்கிய சாலை சந்திப்பு பகுதியில் உள்ளது தாணுமாலையன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி. கடந்த 78 வருட காலமாக இங்கு செயல்பட்டு வரும் நிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இங்கிருந்த பழைய ஓட்டு கட்டிடம் இருந்த இடத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 19.80 லட்சம் செலவில் கான்கிரீட் கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 7.3.2024 அன்று
N.தளவாய்சுந்தரம் M.L.A இதனை திறந்து வைத்தார்.

பள்ளி கட்டிடம் கட்டி ஒரு ஆண்டிற்குள் இதன் மேல்தளத்தின் தரைப்பகுதி முழுவதும் பழுதடைந்து காணப்படுகிறது.இப்பகுதி முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதோடு இதன் தொடர்ச்சியாக ஏனைய பகுதிகளும் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது. இதனால் கட்டிடத்தின் தரம் என்பது தற்போது இத்தகைய பழுதால் வெளிக்காட்ட தொடங்கி உள்ளது. மாணவ மாணவியர் நலன் கருதி குறிப்பிட்ட கட்டிடத்தை தர ஆய்வு செய்வதோடு, இங்கு பயிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

குறிப்பிட்ட பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் பயன்படுத்தும் கழிப்பறைக்கு செல்ல பொய்கை கால்வாய் மேல் குறுக்காக அமைக்கபட்ட பாதை வழியாகவே கடந்து செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதியிலும் கால்வாயினை ஒட்டியும் பள்ளி பக்க சுவர் உயரம் குறைவாக உள்ளது. இதனால் கால்வாயில் இருந்து விஷ ஜந்துக்கள் பள்ளிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இதுபோல் பக்க சுவர் குறைவான உயரம் கொண்டதாக உள்ளதால் கால்வாயில் மாணவர்கள் தடுக்கி விழும் அபாயமும், இதனால் உயிர் இழப்புக்கள் ஏற்படும் சூழலும் உள்ளது.

இப்பள்ளியின் கட்டிட கட்டுமானத்தின் போது முன்புற சுவர் இடிக்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடைந்த பின்பும் அச்சுவர் கட்டப்படாமல் கைவிடப்பட்டது. இப்பகுதியினை தற்போது வலையால் அடைத்து வைத்து உள்ளனர். இதனால் எவரும் பள்ளிக்குள் அத்துமீறி நுழையும் வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் இப்பள்ளி உள்ளதால் இங்கு வரும் மாணவ மாணவியர் கடும் சிரமத்தின் நடுவில் தான் வரவேண்டி உள்ளது. அதிலும் இங்குள்ள குறைபாடுகள் அவர்களது பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே மாணவ, மாணவியர் நலன்கருதி இத்தகைய அவலங்களை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா,தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல் ஆரல்வாய்மொழிபேரூர் தலைவர் D.சகாய பிரிட்டோ, செயலாளர் R.புஷ்பராணி மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சமூக பொதுநல இயக்கம் புகார் அளிக்கும் போது எடுத்த படம்-ஆரல்வாய்மொழி
பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம் - மாணவர் பாதுகாப்புக்கு கேள்விக்குறி
பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம் ஆரல்வாய்மொழியில்
மாணவர்களின் பாதுகாப்பு சிக்கல் – பள்ளி கட்டிடம் இடிந்து காணப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *