தாமரை மலர்கள் நீர்நிலைகளில் பூத்து கிடப்பதை பார்க்கும் போது மனமும் மணம் வீசும். ஆனால் அதன்மூலம் நீர்நிலைகளுக்கு பல்வேறு வகையில் ஆபத்து ஒளிந்திருப்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். தாமரை இலைகள் நீரின் மேற்பரப்பில் பரவி சூரிய ஒளி நீருக்குள் செல்லாமல் தடுக்கும். இதனால் ஆக்சிஜன் உற்பத்தி தடைபடுவதால் பாசிகள் ஒளிச்சேர்க்கை செய்ய இயல்வதில்லை. மேலும் மீன்கள், தவளைகள், நண்டுகள் உள்ளிட்ட உயிரினங்கள் மூச்சுத்திணறி இறக்கின்றன. இதனால் பறவைகள் உள்ளிட்டவைகளின் உணவு சங்கிலி பாதிக்கிறது.
தாமரை வேர்கள், தண்டுகள் நீருக்கடியில் பின்னிப்பிணைந்து நீரோட்டத்தை தடைபடுத்துவதுடன், நீரையும் மாசுபடுத்தி கொசுக்கள் உற்பத்திக்கும் சுகாதார சீர்கேட்டிற்கும் காரணமாகிறது. ஏனைய தாவர இனங்களை அழித்து நீர்நிலைகள் எங்கும் ஆக்கிரமிக்கும் இவற்றின் இலைகள் நீரை அதிகமான அளவில் ஆவியாக்குவதால் நீர்நிலைகளை விரைவில் வறட்சியை சந்திக்கும் நிலைக்கு தள்ளுகிறது.
குமரி மாவட்டத்தில் எஞ்சி உள்ள 3900 குளங்கள் தற்போது தாமரைகளின் ஆதிக்கத்தால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. நீர்நிலைகளில் தாமரைகள் வளர்க்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இருப்பினும் இதன் மூலம் ரூ 10 கோடிக்கு மேல் லாபம் பார்த்து வரும் வியாபாரிகள் அரசு அதிகாரிகளை சரிகட்டி குமரி மாவட்ட நீர்நிலைகளில் வணிக நோக்கத்தில் தாமரைகளை பயிரிட்டு வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் நீர்நிலைகளை பற்றி கவலை கொள்ளாமல் தாமரை விவசாயம் அமோகமாக செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது குளங்களில் தாமரை வளர்க்க நீதிமன்ற ஆணைகளின்படி அனுமதி வழங்கபடவில்லை என தெரிவித்தனர். ஆனால் நீர்நிலைகளில் தாமரைகள் வணிக நோக்கத்தில் வளர்க்கப்படுகிறதே-அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேட்ட போது கள்ள மௌனம் காக்கின்றனர். விதிகளை மீறி தாமரை வளர்க்கப்படுவதோடு அவற்றின் மகசூலுக்காக ரசாயனங்கள் தெளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் அழிவதோடு விவசாயமும் அடியோடு பாதிக்கும் அபாய நிலை உள்ளது.
எனவே குமரி மாவட்ட நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ள தாமரை செடிகளை அகற்றிடவும், மேலும் தாமரை வளர்க்க தடை விதித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E சுரேஷ், விவசாய அணி செயலாளர் N.கிருஷ்ணன், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply