சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழகத்தில்சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்த படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

Social Welfare Movement questions Tamil Nadu government on implementation timeline of Right to Service Act

குடிமக்களுக்கு அரசு சேவைகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பெறுவதை உறுதிபடுத்திடும் வகையில் மத்திய அரசால் சேவை பெறும் உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை மத்திய பிரதேசம், பீகார், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், ஹரியானா, மேற்குவங்கம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட 22 மாநிலங்கள் அமல்படுத்தி அதனால் மக்கள் மிகுந்த பயன்பெற்று வருகின்றனர்.

இதன்படி பிறப்பு/இறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, நிலப்பட்டா, கடவுச்சீட்டு, முதியோர் உதவிதொகை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை 15 முதல் 30 நாட்களுக்குள் குறிப்பிட்ட கால அளவிற்குள் வழங்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் அமைப்புகள் இதற்குள் அடங்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்காமல் தாமதப்படுத்தினால் குறிப்பிட்ட ஊழியர் மீது சட்ட நடவடிக்கை அல்லது அபராதம் பெற இச்சட்டத்தில் வழிவகை உள்ளது.

பொதுமக்கள் மனுக்களை அளித்து பதிவிற்காக பலகாலம் காத்திருப்பதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் புறக்கணிப்பதும் மாறுவதோடு, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும், ஊழல் அற்ற நிர்வாகம் செயல்படவும் இச்சட்டம் பயன்தரும். ஆனால் தமிழகத்தில் இச்சட்டம் இதுவரையில் அமல்படுத்தப்படவில்லை. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் இச்சட்டத்தை நிறைவேற்றுவதாக தெரிவித்தது. ஆனால் இதனை செயல்படுத்துவதற்கான எவ்வித அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.

உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மக்கள் சாசனம் மூலம் தாங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் திட்டங்களை செயல்படுத்துவதாக அரசு வாதிட்டது. மேலும் இதனால் குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற வேண்டியது இல்லை எனவும் கைவிரித்தது. மக்கள் சாசனத்தையும், சேவை பெறும் உரிமை சட்டத்தையும் ஒரே கோட்டில் இணைப்பது தவறானது. குறிப்பிட்ட காலத்திற்குள் சேவைகளை அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க மக்கள் சாசனத்தில் எவ்விதிகளும் இல்லை. ஆனால் சேவை பெறும் உரிமை சட்டத்தில் தாமதித்த அரசு ஊழியர் அபராத கட்டணத்தை அவரது ஊதியத்தில் இருந்தே வழங்கிட வேண்டும்.

தமிழக அரசு புதுபுதுப் பெயர்களில் முகாம்கள் நடத்தி வருகிறது. இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இதனால் ஏற்கனவே உள்ள அலுவலகப்பணிகள் தேக்கம் அடைவதும், திட்டபணிகள் நிறைவேற்ற முடியாத நிலையே உள்ளது. எனவே இத்தகைய கவர்ச்சி திட்டங்களில் அரசு கவனம் செலுத்தாமல் மக்களுக்கான சேவைகள் உறுதிபடுத்திடவும், ஊழல் தடுக்கப்படவும் சேவை பெறும் உரிமைச்சட்டத்தை அமல்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *