சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கி.பி.1766-1956 வரை ஏறத்தாழ 190 ஆண்டுகள் குமரி நிலப்பரப்பு மலையாள மொழியை அரச மொழியாகக் கொண்ட கேரள அரசிடம் அடிமைப்பட்டு கிடந்தது. ஒடுக்கி ஆண்ட இவர்களுக்கு எதிராக தமிழர்கள் வீறு கொண்டு கிளர்ந்து எழுந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து மட்டுமல்ல மன்னர் ஆட்சிக்கொடுமைகளில் இருந்தும் விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையில் மக்கள் களம் கண்டனர். 1823ல் தோள் சேலை போராட்டம் தொடங்கி 1956 ல் குமரி தமிழர் விடுதலைப் போராட்டம் வரையில் இப்போராட்டம் தொடர்ந்தது. 190 ஆண்டுகால அடிமைத்தனம் 9 ஆண்டுகால (1945-1956) தொடர் போராட்டத்தால் முடிவுக்கு வந்தது.
பார்த்தால் தீட்டு, தொட்டால் பாவம், மார்பு வரி என தொடர்ந்த கொடுமைக்கு எதிராக போராடிய மக்களை திருவிதாங்கூர் அரசு இரும்புகரம் கொண்டு ஒடுக்கியது. இருப்பினும் குமரி குமுறி எழுந்தது. தாய் தமிழகத்துடன் இப்பூமியை இணைப்பதற்காய் போராடிய பலருக்கு மரணமே பரிசாக கிடைத்தது. இதையொட்டி புதுக்கடை சந்தையில் 11.8.1954ல்நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்ட வரம் குமாரன், புதுக்கடை செல்லப்பன், தேங்காய்பட்டணம் பீர்முகம்மது என 9 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இவர்களது தியாகத்தை நினைவுகூறும் வகையில் புதுக்கடை பகுதியில் தபால் நிலையம் அருகாமையில் தியாகிகள் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இது குமரிஅனந்தன் அவர்களால் திறந்துவைக்கப் பட்டது. இப்பகுதியில் துப்பாக்கி சூடு நடந்த ஆக 11 அன்று குமரி மாவட்ட இணைப்புக்காய் உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதுபோல் குமரி மாவட்டம் தாய் தமிழ கத்துடன் இணைந்த நவ1ம் தேதியும் இப்பகுதியில் தியாகிகள் தியாகத்தினை போற்றி வருகின்றனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட நினைவுத்தூண் தற்போது கவனிப்பாரற்ற நிலையில் இப்பகுதியில் உள்ள தெருக்கடைகளின் ஆக்கிரமிப்பினால் தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. கடைகளுக்கு நடுவில் இந்த நினைவு தூணை தேட வேண்டிய நிலைக்கு பரிதாப நிலையில் உள்ளது. தனது தியாகத்தால் நீங்க முடியாத வகையில் நமது நெஞ்சில் வாழும் நேசத்தலைவர்களை நினைவு கூறும் இதுபோன்ற வரலாற்று சுவடுகள் நாம் வாழும் காலங்களிலேயே மறந்துபோனது வரலாறுகளை புதைப்பதற்கு ஒப்பானதாகும்.
உயிரை இழப்பது என்பது தனிப்பட்ட இழப்பு. உரிமையை இழப்பது என்பது இனத்திற்கான இழப்பு எனக் கருதி போராடியவர்களை நினைவுக் கூறும் தூணை கூட பாதுகாக்க முடியாமல் உள்ளது வேதனை அளிப்பதாகவே உள்ளது. குமரி வளத்தையும், மலையையும், நிலத்தையும், நீர்நிலையையும் பாதுகாக்க தவறி வரும் நாம் குமரி மண்ணிற்காய் போராடிய தலைவர்களையும் மறந்து போனது மன்னிக்கவே முடியாத குற்றமாகும். தியாகிகள் நினைவைப் போற்றுவோம். அடையாளச் சின்னங்களான நினைவு தூண்களை பாதுகாப்போம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply