சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மேல்பாறை கிராமத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கல் -சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாறை கிராமத்தில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு இங்குள்ள ரேஷன் கடை மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்போது கடந்த சில மாதங்களாக வழங்கப்படும் அரிசியினை வாங்கியும் கிராம மக்கள் பயன்படுத்த இயல்வதில்லை.

ரேஷன் கடையின் மூலம் வழங்கப்படும் அரிசி பழுப்பு வண்ணத்தில் துர்நாற்றம் வீசி வருவதோடு தரமற்றதாக உள்ளது. இது தொடர்பாக மக்கள் ரேஷன் கடையில் கேட்டால் எங்களுக்கு தருவதைத் தான் நாங்கள் உங்களுக்கு தரமுடியும் என அலட்சியமாக கூறி வருகின்றனர்.
இதனால் வாங்கிய அரிசி உலைக்குப் போகாமல் குப்பைக்கே போகிறது. அரசு என்ன நோக்கத்திற்காக இலவச அரிசி வழங்குகிறதோ அது நிறைவேறாத நிலையில் மக்கள் அவதிப்படும் நிலையே இங்கு உள்ளது.

பெயருக்கு அரிசி வழங்குவதால் எவருக்கும் பலன் அளிக்காத நிலையில் மக்கள் பாதிக்கப்படும் சூழலே உள்ளது. உணவு கிட்டங்கியில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பபடும் போது தரமற்ற அரிசியாக இருந்தால் அதனை விநியோகம் செய்யக்கூடாது. அல்லது கடைகளுக்கு வழங்கபட்ட அரிசி தரம் குறைவாக இருப்பின் அதனை திரும்ப பெற்று தரமான அரிசி வழங்கி அதனை முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை குறிப்பிட்ட துறை உறுதிபடுத்திடவேண்டும்.

மாறாக தரமற்ற உணவு பொருட்கள் வழங்குவதால் இதனை பயன்படுத்தி பாதிக்கப்படுபவர்களுக்கு யார் பொறுப்பு? உணவு பொருட்கள் விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துவரும் நிலையில் அதற்கு மக்கள் பலிகடாக்கள் ஆக்கப்படுவது வாடிக்கையாகிப் போனது. எனவே இத்தகைய தொடரும் துயருக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்கள் பணம் விரயமாவது தடுக்கப்பட வேண்டும். மக்களின் பசியை போக்குவதற்காக வழங்கப்படும் அரிசி தரமானதாக இருப்பதை கண்காணிக்க வேண்டும். மேல்பாறை மக்களுக்கு தரமான அரிசி விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் தலைமையில் குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா, தக்கலை ஒன்றிய செயலாளர் L.தேன் ரோஜா, மேல்பாறை கிளை தலைவர் நாகராஜன், செயலாளர் வின்சென்ட், பொருளாளர் செந்தில், மகளிர் அணி தலைவர் நிர்மலா, செயலாளர் சுஜா மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *