சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திரும்பும் திசையெங்கும் குப்பைதிருப்பூர் பிரச்னைக்குதீர்வு தான் எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

திருப்பூர் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக உள்ள நிலையில் இங்கு திசை எங்கும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் இது நாறும் நகரமாக மாறிப்போனது. ஏற்கனவே சாய கழிவுகளால் நொய்யல் ஆறு மாசுபட்டு உள்ள நிலையில் தேக்கம் அடையும் குப்பை பெரும் சவாலாக மாறி உள்ளது. இங்குள்ள 60 வார்டுகள் மூலம் தினமும் 800 டன் குப்பைகள் சேகரமாகிறது. இவை முடலி பாளையம், பொங்குபாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கை விடப்பட்ட கல்குவாரிகளில் மாநகராட்சி மூலம் கொட்டப்படுகிறது.

கல்குவாரிகளில் தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படும் குப்பைகளால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. மேலும் இப்பகுதி நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு சுற்றுசூழலுக்கும் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பாறை குழிகள் நிரம்பி வழியும் கழிவுகள் ஊத்துக்குளி, பல்லடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பரவி குடியிருப்புவாசிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. மேலும் தெருக்களிலும், பொது இடங்களிலும் தேங்கி கிடக்கும் குப்பைகள் மக்களின் சுகாதாரத்திற்கு கேள்விகுறியாகி உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரிவர செயல்படுத்தாத நிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜூலை 2025ல் ரூ 3.15 கோடி அபராதம் விதித்தது. தேசிய பசுமை தீர்ப்பாய அறிக்கையின் படி தரம்பிரிக்காமல் தினம் 100 டன் அளவிலான குப்பைகள் கொட்டப்படுவதை உறுதி அளித்து உள்ளது. மக்களிடம் இருந்து கழிவு குப்பைகள் மேலாண்மைக்கு என மாநகராட்சி குப்பை வரி வசூலித்து வருகிறது. இருப்பினும் சரிவர நிர்வகிக்காத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தினமும் சேகரமாகும் மக்கும் குப்பை 500 டன், மக்காத குப்பை 300 டன் தரம் பிரிக்க தனியார் நிறுவனத்திற்கு மாநகராட்சி தினமும் ௹ 38 லட்சத்து 500 வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இருந்தும் உரியமுறையில் பணிகள் மேற்கொள்ளப்படாததால் இங்குள்ள 16 லட்சம் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டு திருப்பூரில் எரிக்கப்படுவது ஒருபுறம் இருக்க தேங்கும் கழிவு. குப்பைகள் மறுபுறம் மக்களை நிம்மதி இழக்க வைத்து உள்ளது.

சுற்றுசூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பேராபத்தாக உருமாறிப் போன கழிவு குப்பைகளை முறையாக தரம் பிரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குப்பை கழிவுகளை பாறை குழிகளில் கொட்டுவதை தவிர்த்து அதனை மறுசுழற்சி செய்யவும், உரம் தயாரிக்கவும், சி.என்.ஜி. உற்பத்தி மையம் அமைக்கவும் உரிய பணிகளை மேற்கொள்தல் அவசர அவசியம். நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டால் மட்டுமே இப்பகுதியில் மக்கள் நிம்மதியாய் வாழ முடியும். விடியல் ஆட்சியில் திருப்பூர் மக்களுக்கு விடியல் கிடைக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *