பொதுநல இயக்கம் கேள்வி-
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். ஆனால் உண்மையில் ரொக்கத்தில், சொக்க தங்கத்தில் தான் நிச்சயிக்கப்பட்டு வருகின்றன. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என சட்டம் சொல்கிறது. ஆனால் சமூகம் அங்கீகரித்து உள்ள இக்கொடுமைக்கு நித்தம் எத்தனை உயிர்கள் மடிகின்றன.இருந்தும் இந்த அவலம் நீங்காத நிலையில் தொடர்வது ஏன்?
சமீபத்தில் நடந்த நெஞ்சைவிட்டு நீங்காத சம்பவம். திருமணமான 78 நாட்களில் 3 முறை பெற்றோரின் வீட்டிற்கு திரும்பிய திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரிதன்யா ஓர் MSC/CA பயின்ற பட்டதாரி. 70 லட்சம் மதிப்பில் கார், 300 சவரன் நகை என வழங்கபட்டபின்பும் வரதட்சணைக்கு பலியான ரிதன்யாவின் வாக்குமூலம் இது…வேறொரு வாழ்வை தேர்வு செய்ய எனக்கு மனவலிமை இல்லை. இது என் தலைவிதி. அதன்படிதான் எல்லாம் நடக்கும் அதை மாற்றமுடியாது.. சமூக கற்பித்தலிலும், கௌரவத்திலும், ஆண் ஆதிக்கத்தாலும் நித்தம் சத்தம் இன்றி எத்தனையோ மரணங்கள் சாட்சிகளின்றி சவக்குழிக்கு செல்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிபரப்படி கடந்த 2020ல் 7045 பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு உயிர் இழந்து உள்ளனர். 2022ல் 6516 பேர் உயிரிழந்து உள்ளனர். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 2142 பெண்களும் பீகாரில் 1057 பேரும் பலியாகி உள்ளனர். மேலும் 2022ல் திருமணமான பெண்ணை வரதட்சணை காரணமாக துன்புறுத்தியதாக நாட்டில் 144593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபோல் 2022 ல் 60577 வரதட்சணை மரண வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 பெண்கள் வரதட்சணை கொடுமையால் கொல்லப்படுகின்றனர்.
1961ல் வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு 1984,மற்றும் 86ல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1983ல் இந்திய தண்டனை சட்டத்தில் 498 (A) பிரிவு இணைக்கப்பட்டது. கணவனோ, உறவினர்களோ பெண்ணை மன/உடல் ரீதியாக துன்புறுத்தினால் சிறை தண்டனையை உறுதிசெய்கிறது சட்டம். ஆனாலும் இவை வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன.கல்வி கடை சரக்காகி போன நிலையில் அதனை கைமாறாக வாங்குவதற்கு வரதட்சணையை பயன்படுத்துகின்றனர். பல்வேறு செலவினங்களை ஏற்படுத்துவதாக கருதி பெண் குழந்தைகள் சிசு கொலைக்கு உள்ளாவதும் சமூக கொடுமையே..
பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருப்பினும் கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பாததால் இத் தீங்கு தொடர்கிறது. தன் வாழ்க்கை துணையினை தானே தேர்வு செய்யும் உரிமையையும், வாழ்க்கையில் தவறு நடந்து விட்டால் அதனை புறம்தள்ளி புதிதான வாழ்வை தேர்வு செய்யும் தனிமனித சுதந்திரமும் எப்போது பெறுமோ அப்போது இத்துயர் தொலையும். திருமணம் வணிகமயமானதை தடுத்து, சமத்துவம், விழிப்புணர்வு கல்வி ஏற்படுத்திடுவதோடு இத்தகைய குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுப்பதும் அவசியம். வாழ்க்கை துணையே தட்சணை. வாங்க வேண்டாம் வரதட்சணை. இனியும் ஒரு ரிதன்யாவோ, ஸ்ருதியோ, பிரியதர்ஷினியோ இறப்புக்கு நீங்கள் காரணமாய் இருக்க வேண்டாம்…
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply