Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

பராமரிப்பின்றி மண்ணிற்குள் மறையும் மணவாளக்குறிச்சி பெரியகுளக்கரை கல்வெட்டுக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

மணவாளக்குறிச்சி பெரியகுளக்கரையில் பராமரிப்பின்றி சேதமடைந்து வரும் பழமையான கல்வெட்டுக்கள்

வள்ளியாற்றின் மூலம் நீர்வரத்துப்பெறும் மணவாளக்குறிச்சி பெரியகுளம் 155 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன்மூலம் 200.61 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. இக்குளம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டு பழமையானது என்பது இங்குள்ள கல்வெட்டுக்கள் வழியாக அறிந்து கொள்ளலாம். இக்குளத்தின் கிழக்கு கரை பகுதியில் உள்ள பாறை எழுத்திட்டான் பாறை என அழைக்கப்படுகிறது. இங்கு மூன்று பழங்கால கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் ராஜராஜ சோழன் காலத்திய இக்கல்வெட்டில் இந்நீர்நிலையினை பெருங்குளம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இது மருவி காலப்போக்கில் பெரியகுளமாகிப் போனது.

எழுத்திட்டான் பாறை பகுதியில் உள்ள இசக்கிஅம்மன் கோவில் பின்புறமாக உள்ள பாறையில் குளக்கரையில் உள்ள கல்வெட்டு முதலாம் ராஜராஜ சோழனின் 27வது ஆட்சி காலத்தினை(பொதுவருடம் 1012) சார்ந்ததாகும். 1012ம் ஆண்டில் பெரியகுளம் உடைப்பெடுத்த நிலையில் ராஜராஜ சோழன் அதனை சரிசெய்து கொடுத்ததுடன் அதனை பராமரிக்க நிலத் தானமும் அளித்து உள்ளான். தவறினால் என்ன அபராதம் விதிக்கப்படும் என்ற விபரமும் இந்த கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.21 வரிகள் கொண்ட வட்டெழுத்தில் எழுதப்பட்ட இக்கல்வெட்டில் முதல் 7 வரிகள் அவரின் பெருமையினை சொல்கிறது. 8வது வரி கல்வெட்டு தகவலையும், 9 முதல் 21 வரை பெரியகுளம் குறித்த இத்தகவலையும் தெரிவிக்கிறது.

இசக்கி அம்மன் கோவிலில் வடகிழக்குப பகுதியில் சாலையின் அடிப்பகுதியில் வயல் பரப்பை ஒட்டி உள்ள கல்வெட்டு 13ம் நூற்றாண்டை சேர்ந்தது. கொல்லம் ஆண்டு புழக்கத்திற்கு வந்த பிறகு இது வெட்டப்பபட்டது என்பதை தமிழ் மற்றும் மலையாளம் கலந்த மொழிநடையில் எழுதப்பட்டது மூலம் அறியலாம். வேணாட்டில் 1215 முதல் 1266 ஆண்டு வரையில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் நிலையான மன்னர் ஆட்சி நடைபெறவில்லை என்ற தகவல் இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. கொல்லம் ஆண்டு 440 (பொதுவருடம் 1265ல் இக்கல்வெட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இங்குள்ள கோவிலுக்கு கிழக்கு பகுதியில் பாறை சரிவில் உள்ள கல்வெட்டு கொல்லம் ஆண்டு 773(பொது ஆண்டு 1597) வெட்டப்பட்டு உள்ளது. வேணாடு மன்னர் இரவிவர்மன்(எ) குலசேகரப் பெருமாள் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் நயினார் இரவிவர்மரான குலசேகரப்பெருமாள் என்கிற வேணாட்டு அரசர் ஸ்ரீபத்மனாபப் பெருமாள் கோவிலின் அருகே கட்டிய திருமடத்துக்கும் அதன் செலவுகளுக்கும் கடிகைப்பட்டினம் தேசத்தில் சில நிலங்களை ஒதுக்கியதை இக்கல்வெட்டு பதிவு செய்து உள்ளது. இக்கல் வெட்டு க்கள் மூலம் சோழர் ஆட்சியில் குமரி மாவட்டம் வரை நீர்பாசனம் கவனம் பெற்றதை காட்டுகிறது.

சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது.அதன்நீட்சியே இங்குள்ள நீர்பாசன மேலாண்மை என்பதும் இராசராசனின் மெய்க்கீர்த்தியில், கோவில் பள்ளியகம் என்ற சொற்றொடர் வேறு எந்த கல்வெட்டுக்களிலும் இல்லாதது இக்கல்வெட்டின் தனிச்சிறப்பாகும். இத்தகைய பெருமை கொண்ட இக்கல்வெட்டுக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் மண்ணிற்குள் புதைந்தும், அழிந்தும், சேதமடைந்தும் வருகிறது. சோழர் காலத்து நீர்பாசன ஆவணமாக திகழும் இக்கல்வெட்டுக்களை பராமரித்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வது அவசர அவசியம்.

மணவாளக்குறிச்சி பெரியகுளக்கரை கல்வெட்டுக்களை பாதுகாக்க கோரிக்கை
மண்ணிற்குள் மறையும் பெரியகுளக்கரை பழமையான கல்வெட்டுக்கள்
பராமரிப்பின்றி அழியும் மணவாளக்குறிச்சி கல்வெட்டுக்கள்
ராஜராஜ சோழன் கால கல்வெட்டுக்களை பாதுகாக்க கோரிக்கை
மணவாளக்குறிச்சி கல்வெட்டுக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை தேவை
பெரியகுளக்கரை வரலாற்று கல்வெட்டுக்கள் அழியும் அபாயம்
சோழர் கால நீர்ப்பாசன வரலாற்றை சொல்லும் கல்வெட்டுக்கள்
கன்னியாகுமரியின் பழமையான கல்வெட்டுக்களை பாதுகாக்க வலியுறுத்தல்
மணவாளக்குறிச்சி பெரியகுளம் கல்வெட்டுக்கள் பராமரிப்பின்றி சேதம்
வரலாற்று முக்கியத்