Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

அரசுத்துறைகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விசாக கமிட்டி இதுவரை முறையாக அமைக்கப்படவில்லை – சமூக பொது இயக்கம் குற்றச்சாட்டு.

அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்புக்கான விசாக கமிட்டியை முறையாக அமைக்க கோரிக்கை

உச்சநீதிமன்றம் கடந்த 1997ல் வழங்கிய விசாகா தீர்ப்பின் அடிப்படையில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவும், புகார்களை விசாரிக்கவும் குழு அமைக்க வேண்டும் என வழிகாட்டப்பட்டது. 2013ல் Sexual Harassment of Women at workplace (prevention, prohibition and Redressal) Act ன்படி POSH சட்டம் இயற்றப்பட்ட பிறகு இது உள்புகார் குழு (Internal Complaints Committee) ICC என அழைக்கப்படுகிறது.

இதன்படி பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ள தனியார் மற்றும் அரசுப்பணி இடங்களிலும் ICC குழு அமைக்கப்பட வேண்டும். குழு தலைவராக ஒரு பெண் அதிகாரி இருக்க வேண்டும். இதில் 50% உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். இக்குழுவில் பெண் உரிமை தொடர்பான அனுபவம் வாய்ந்த வெளிநபர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும். குழு உறுப்பினர்கள் பெயர், தொடர்பு எண் போன்றவை பணி இடத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த ஜூன் 2025ல் அரசு இது தொடர்பான SOP (Standard operating procedure) வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான LCC (Local Complaints Committee) அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் செயல்படும் உள்புகார் குழு மேல்முறையீடு செய்யவும், உள்புகார் குழு மீது நம்பிக்கை இல்லாத நிலையிலும் இக்குழு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்.

பணி இடங்களில் பாதிக்கப்படும் பெண்களின் உரிமையினை பாதுகாத்திடும் வகையில் அமைக்க அறிவுறுத்தப்பட்ட ICC குழுவிற்கு சிவில நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்கள் உள்ளது. ஆனால் அரசின் பல்வேறுத் துறைகளிலேயே இதுவரை குறிப்பிட்ட குழு அமைக்கப்படாத நிலையே உள்ளது. இதனால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களுக்கான நீதியினை பெறுவதில் பெரும் சிரமங்களே உள்ளது. இதனால் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பல இடங்களில் அமைக்கப்பட்ட குழு முறைப்படி இல்லாமலும், செயல்பாட்டில் இல்லாமலும் உள்ளது. அரசின் துறைகளிலே இக்குழு அமைக்கப்படாத நிலையில் தனியார் நிறுவனங்கள் இதுகுறித்து கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகிறது. 2025 ஜூலையில் வெளியான தகவலின்படி சுமார் 50 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை ICC குழு அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பயிலும் மாணவிகள் தங்களது பிரச்னையினை தெரிவிக்காத இயலாத நிலையே உள்ளது. தற்போது பலவிதங்களிலும் பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் சூழ்நிலையில் அவர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்திடும் வகையில் முறையாக அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தமிழக அரசு விசாக கமிட்டியினை ஏற்படுத்தியாக வேண்டும்.