Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை குறைக்க அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

தமிழ்நாட்டில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை குறைக்கும் அரசின் முடிவுக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இதனை 14 ஆக குறைக்க தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்தது. ஆயிரத்துக்கும் குறைவான வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை கலைக்கவோ அல்லது ஏனைய நீதிமன்றங்களுடன் இணைக்கவோ உச்சநீதிமன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில் தமிழக அரசு இம்முடிவினை எடுத்து முன்மொழிந்து உள்ளது.

இதன்படி திருப்பூர், நீலகிரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் ஈரோட்டில் உள்ள நீதிமன்றத்துடன் இணைக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட வழக்குகள் கிருஷ்ணகிரியிலும், சேலம் மாவட்ட வழக்குகள் நாமக்கல்லிலும், சிவகங்கை. ராமனாதபுரம் மாவட்ட வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும், புதுக்கோட்டை மாவட்ட வழக்குகள் தஞ்சாவூரிலும், கரூர் மாவட்ட வழக்குகள் திருச்சியிலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட வழக்குகள் திருநெல்வேலிக்கும் மாற்றப்பட்டு உள்ளது.

இதுபோல் விழுப்புரம், கடலூர் மாவட்ட வழக்குகள் திருவண்ணாமலையிலும், திண்டுக்கல் தேனி மாவட்ட வழக்குகள் மதுரையிலும், பெரம்பலூர் அரியலூர், நாகப்பட்டினம் மாவட்ட வழக்குகள் திருவாரூரிலும் மாற்றப்பட உள்ளது. நிதிச்சுமையினை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் இதனால் நுகர்வோர் கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையே ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்ட மக்கள் அண்டை மாவட்டங்களுக்கு தான் செல்ல வேண்டிய நிலை இதனால் ஏற்பட்டு உள்ளதால் பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ளவர்களுக்கு இது பெரும் செலவையும், அலைச்சல்களையும் ஏற்படுத்துவதாக அமையும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் நோக்கம் எளிதாக அணுகக்கூடிய நீதி என்பதே. ஆனால் தொலைதூரங்களில் நுகர்வோர் நீதிமன்றங்களை இடமாற்றம் செய்வதின் மூலமாக பலர் வழக்கு தொடர தயங்கும் நிலை ஏற்படும். இவர்களது உரிமையும், நீதியும் மறுக்கப்படும் நிலையே ஏற்படுவதோடு, பாதிப்பிற்கு உள்ளான நபர்கள் உரிய நிவாரணம் பெற இயலாத நிலைக்கு தள்ளப்படுவர். ஆணையங்கள் இணைக்கப்படுவதின் மூலம் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் தீர்ப்பு வழங்க இயலாத நிலை ஏற்படுவதோடு வழக்குகள் தேக்கநிலைக்கு தள்ளப்படுவதோடு நுகர்வோர் அலைக்கழிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படலாம்.

நுகர்வோர் நீதிக்கு எதிரானதாகவும், நுகர்வோர் நீதியின் அணுகலை பாதிக்கும் வகையிலும் நுகர்வோர் நீதிமன்ற குறைப்பு நடவடிக்கை அமையும். நுகர்வோர் நலனை பாதுகாத்திடவும், அவர்களது செலவினம், காலவிரயம், வீண் அலைச்சல்கள், மன உளைச்சல்கள் இவற்றை தவிர்த்திடும் வகையில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை குறைக்கும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும்.