கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையிலான இரட்டை ரயில்பாதைப் பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி நுள்ளி விளை பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் புதிதாக கட்டுவதற்கென ஏற்கனவே இருந்த பாலம் இடிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இப்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் 8 மாதத்தில் இப்பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட பாலப்பணி பில்லர் அமைக்கும் பணியே இன்னும் முழுமையடையாத நிலையில் குறிப்பிட்ட பணிகள் ஆமை வேகத்திலேயே நடந்து வருகின்றன.
குறிப்பிட்ட பாலம் அமைக்கப்படும் தோட்டியோடு – திங்கள் சந்தை சாலை வழியாக தேங்காய்பட்டணம், குளச்சல், இரணியல், நெய்யூர், கருங்கல், மண்டைக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் பல்வேறு கிராமங்களை இணைக்கும் தொப்புள்கொடியாகவும் இச்சாலை திகழ்கிறது. இச்சாலை வழியாக வரும் வாகனங்கள் பரசேரி, கொன்னக்குழி விளை, நான்குவழிச்சாலை, பேயன் குழி வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.குறுகிய இச்சாலைகள் போக்குவரத்து நெருக்கடி காரணமாக மிகவும் திண்டாடி வருகின்றன.
குறிப்பாக பேயன் குழி பாலம் முதல் இரட்டைக் கரை சானல் வழியாக இருபுறங்களிலும் உள்ள சாலை வழியாக நான்குவழிச்சாலைக்கு பேருந்துகள் செல்லும் நிலையில் இச்சாலை குண்டும் குழியுமாக காட்சி அளித்து உள்ளது. இதனால் இப்பகுதி வழியாக சென்ற வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகிய நிலையில் இம்மார்க்கமாக பேருந்துகளை இயக்க ஓட்டுனர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இவ்வழியாக வரும் பேருந்துகள் தோட்டியோடு, வில்லுக்குறி, தக்கலை, இரணியல் வழியாக சென்று வருகின்றன. இதனால் ஏற்கனவே நுள்ளி விளை உள்ளிட்ட பல கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது பல கிராமங்கள் போக்குவரத்து வசதி இன்றி பாதிக்கப்பட்டு உள்ளன.
இதனால் இப்பகுதியினைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் கடும் பாதிப்பிற்கும், அலைக்கழிப்பிற்கும், வீண் அலைச்சலுக்கும், காலவிரயத்திற்கும், உடல் பாதிப்புகளுக்கும் உள்ளாகும் நிலைமை உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு செல்ல இயலாமல் மாணவர்களும், சிகிச்சை பெற செல்லும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும், பெண்களும், முதியோர்களும் என இதன் பாதிப்பில் இருந்து தப்பாத ஒருவரும் இல்லாத நிலையே உள்ளது. இது போலவே வில்லுக்குறி பாலம் முதல் நான்குவழிச்சாலை வரையிலான இணைப்பு சாலையும் கவனிப்பாரின்றி கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எனவே குறிப்பிட்ட மாற்று சாலைகளை உடனடியாக சீரமைத்து மக்கள் பாதிப்பு அடைவதை தடுத்திடும் படி சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் P.சந்திரா, குமரி (மத்திய) மாவட்ட தலைவர் ஐ. கென்னடி, செயலாளர் D. தேவதாஸ், அமைப்பு செயலாளர் V.கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்கள் V. ரெக்சின் ராஜகுமார், J..ஜோசப் லீனோஸ், துணை செயலாளர் R.ராஜதுரை, பொருளாளர் S. விக்ரமன், தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A.கணபதி மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.


