சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 40) அவரது மனைவி தேன்மொழி(35) ஆகியோர் அரக்கோணம் சாலையில் வெள்ளை கேட் பகுதியில் விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் கடந்த 6 மாத காலமாக வேலை செய்து வந்தனர். ரூ.20 ஆயிரம் முன்பணமாக வாங்கி இருந்த நிலையில் வியாபாரி ஆறுமுகம் போட்டுக் கொடுத்த தார்பாய் கூடாரத்தில் தங்கி வேலை பார்த்து வந்து உள்ளனர். தேன்மொழி கர்ப்பிணியாக இருந்த நிலையில் 8.9.26 அன்று பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல கணவர் ஆனந்தன் முயன்றார்.
அப்போது வியாபாரி ஆறுமுகம் அவர்களை தடுத்ததோடு வாங்கிய கடனைக் கொடுக்காமல் அங்கிருந்து செல்லக் கூடாது எனக் கூறி அங்கு கர்ப்பிணி பெண்ணை அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண் தேன்மொழி துடிதுடித்த நிலையில் அவரும், பச்சிளம் குழந்தையும் அப்பகுதியிலேயே உயிர் இழந்து உள்ளனர். மனிததன்மை அற்ற இத்தகைய சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கின்றோம். இது தொடர்பாக பொன்னேரி கரை போலீசார் குற்ற எண்.266/2026 BNSS. பிரிவு 194 ( சந்தேகத்திற்கு உரிய மரணம்) குற்ற எண் 267/2026 SC/ST (அட்டூழியத் தடுப்பு) சட்டப்பிரிவு 3(1) (b) வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருளர் உள்ளிட்ட பழங்குடி சமூகத்தினர் மரம்வெட்டுதல், செங்கல்சூளை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில் வாங்கிய முன்பணம் மூலம் எவ்வகையில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் இச்சம்பவம் வெளிப்படுத்தி உள்ளது. மேலும் கடன்காரணமாக வேலை செய்யும் இடத்தை விட்டு வெளியேற அனுமதி மறுப்பு, மருத்துவ உதவி மறுப்பு உள்ளிட்டவை இவர்கள் மீதான சுரண்டலையும், கொத்தடிமை தனத்தையும் வெளிச்சப்படுத்துவதாய் உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்பு உடைய ஆறுமுகம் மீது கொத்தடிமை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் 1976 பிரிவையும் சேர்த்து உடனடியாக கைது செய்தாக வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு உதவும் நோக்கில் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம் செயல்பட்டு வந்த போதும் தொழில் செய்யும் பணித்தளங்களில் இவை முறையாக செயல்படுத்தப்படாத நிலையினையே கர்ப்பிணி மரணம் வெளிக்காட்டி உள்ளது. எனவே பணித்தளங்களில் ஆன்மா (ANM) திட்ட செவிலியர் வருகை, கர்ப்பிணி பதிவு மற்றும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பொறுப்பை முதலாளிக்கு சட்டபூர்வமாக விதிக்க வேண்டும். மாவட்ட அளவில் இதுதொடர்பாக விழிப்புணர்வு குழுக்களை செயல்படுத்துவதோடு முன்பணம் வாங்கி வேலை செய்யும் அனைவரையும் அடையாளம் கண்டு விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிங்காடி வாக்கம் போன்ற குடியிருப்புகளில் சுகாதாரத்துறை மற்றும் தொழிலாளர் துறை தொடர் ஆய்வு பணிகளில் ஈடுபடவேண்டும். மேலும் விறகு, செங்கல், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் குறித்து பதிவு செய்யப்படுவதோடு அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.ரூ20 ஆயிரம் கடனுக்காக இரு உயிர்கள் பறிபோன நிலையில் இதுபோல மேலும் குற்றங்கள் தொடராத வகையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்வதோடு அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்கள் இருப்பினும் அவை அமலாக்கத்தில் தோல்வி அடைவதால், பலவீனமாக உள்ளதால் அப்பாவி உயிர்கள் பலியாவது தொடர்கதையாய் உள்ளது. விரைவான விசாரணை, கடும் நடவடிக்கை, தொடர் கண்காணிப்பு மூலமே இத்தகைய சோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.