Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

நேபாளம் உணர்த்தும் எச்சரிக்கை – தமிழகம் தப்பிக்க தடுப்பு நடவடிக்கை எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் பெருவெள்ளத்தை தொடர்ந்து தமிழகத்தில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைக்கு கோரிக்கை

நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த 26ந்தேதி ஏற்பட்ட பனிப்பாறை சரிவு திரிசூலி ஆற்றுப் படுகையில் பெரும் சேற்று வெள்ளத்திற்கு காரணம் ஆனது. இதனால் 600 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த நிலையில் சுமார் 3000 பேர் காணாமல் போனதாகவும் வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாய் உள்ளன. இது ஒரு அரிய இயற்கை விபத்து அல்ல. இதே ஆற்றுப்பாதையில் ஜூலை.2025 காலத்திலும் இதேபோன்ற பனிப்பாறை ஏரி உடைப்பு நடந்தது.13 மாதத்தில் இங்கு இரண்டாவது பெருவெள்ளம் வந்து உள்ளது. இமயமலை காலநிலை மாற்றத்தால் வேகமாக வெப்பமடைகிறது. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன. நேபாள பனி பகுதிகள் கடந்த 30 ஆண்டில் சுமார் மூன்றில் ஒரு பங்கை இழந்து நிற்கிறது.

நிரந்தர உறைபனி உருகுவதால் மலைச்சரிவுகள் தளர்வடைகின்றன. பனிப்பாறை சரிவுகள் மூலம் மலை நிலைத்து நிற்கும் என்ற எண்ணம் பொய்யாகி வருகிறது. இதனால் இமயமலை செயலில் உள்ள அபாய மண்டலமாகவே கருத வேண்டும். நேபாளபாதிப்பின் பெரும்பகுதி ஆற்றங்கரையில் கட்டப்பட்ட வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின்திட்டங்கள், சுரங்கப்பாதைகளே. மலை மற்றும் ஆறுகளில் சாலை, நீர்மின்திட்டங்கள், சுற்றுலா இவற்றை பொருளாதார வளர்ச்சி என மட்டும் பார்க்க முடியாது. சுற்றுசூழல் பாதுகாப்பு, இயற்கை இழப்பு, பல்லுயிர் மேம்பாடு, நிலம் மற்றும் பனி சரிவு, சேற்று அலை ஆகியவற்றை கணக்கிடாத திட்டம் அடுத்த பேரிடரின் ஆரத்தியாகவே அமையும். ஆற்றங்கரை வளர்ச்சி என்பது ஆபத்துகுவிப்பாக உருமாற்றம் கொள்ளும்.

பேரிடர் முடிந்ததும் நிவாரணம் கொடுத்து மறக்கடிக்கப்படுவதால் அடுத்து வரும் ஆபத்துகள் குறித்தோ, பாதிப்புகள் குறித்தோ நாம் அக்கறை காட்டுவது இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் இதேபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் பகுதிகளாகவே உள்ளன. நீலகிரியில் GS| வரைபடம் சுமார் 1000 சதுர கி.மீ பகுதியினை உயர் ஆபத்து மண்டலமாக காட்டுகிறது. சாலை விரிவாக்கம், தேயிலை தோட்டங்கள், சுற்றுலா, உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றால் சரிவுகள் தூண்டப்படும் நிலை உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆபத்துமண்டலங்களில் புதிய கட்டுமானங்களை தடைசெய்வது, ஏற்கனவே உள்ளவற்றை மறுஆய்வு செய்வது அவசியமான ஒன்றாகும். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மண்சரிவு, வெள்ள எச்சரிக்கை ஏற்பாடுகளை வலுப்படுத்திட வேண்டும். தமிழக மலைப்பகுதிகளில் செயல்படும் நீர்மின்திட்டங்கள், அணைகளின் பாதுகாப்பு, திடீர் வெள்ளம் தாங்கும் திறன் ஆகியவற்றை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இமயமலை பனிப்பாறை உருகுதல் போல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிர மழை மற்றும் நில பயன்பாட்டு மாற்றம் சரிவுகளை ஏற்படுத்திடும் ஆபத்து உள்ளதால் இவ்விஷயத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்தல் மிகவும் அவசியம்.

நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவு ஆபத்து உள்ள பகுதிகளை கண்டறிந்து கட்டுமானங்களுக்கு தடை விதிப்பதும், சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வைப்பதும், மலைப்பகுதியில் வசிப்போருக்கு ஆபத்து கால பயிற்சி அளிப்பதும், ஆற்றுப் படுகை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையினை சூறையாடும் திட்டங்களை நிறுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு எமனாக விளங்கும் ஆலைகளுக்கு தடை விதிப்பதும், எல்லை இல்லாமல் இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதை தடுப்பதும் உடனடியாக மேற்கொள்தல் வேண்டும். எங்கோ நடப்பது போல் இங்கும் துயரசம்பவங்கள் நடக்காமல் தடுப்பது அரசின் நடவடிக்கையில் தான் இருக்கிறது.

தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.