Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லைக்கு மாற்றும் முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நெல்லைக்கு மாற்றும் முடிவுக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 32 நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை செலவினத்தை குறைக்கும் நடவடிக்கையின் படி 14 ஆக குறைக்க தமிழக அரசு முடிவு எடுத்து உள்ளது. இதன்படி பல்வேறு மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்கள் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் செயல்படும் நீதிமன்றங்கள் உடன் இணைக்கப்படுகிறது. இதன்படி குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்- 2019 ன் படி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் ரூ 1 கோடி வரையிலான மதிப்புள்ள வழக்குகள் நுகர்வோர் தாக்கல் செய்ய இயலும். இதைத்தொடர்ந்து 30.12.21 அன்று வெளியான திருத்த விதிகளின்படி ரூ 50 லட்சம் ஆக வரம்புத்தொகை குறைக்கப்பட்டது. இவ் வரம்பு தொகை இழப்பீடு கோரும் தொகை அல்ல. பொருள் அல்லது சேவைக்காக நுகர்வோர் உண்மையில் செலுத்தியத் தொகையினை அடிப்படையாக கொண்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்படும் நுகர்வோர் எளிதில் இதன்மூலம் தீர்வு காண இயலும்.

குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் நாகர்கோவில் பகுதிக்கு எளிதில் வர இயன்றது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் அணுக முடியும் ஏற்பட்டதோடு நிவாரணமும் கிடைத்து வந்தது. தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பலகி.மீ கடந்து நெல்லைக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பல மாவட்டங்களின் வழக்குகளும் இங்கு சேருவதால் அவை தேங்குவதோடு குறிப்பிட்ட காலத்தில் நீதி கிடைக்காத நிலையே ஏற்படும்.

பாதிப்புக்கு உள்ளாகி அதற்கு தீர்வு கிடைக்க நீதிமன்றத்தை நாடுவோர் மேலும் பாதிக்கப்படும் நிலையில் வீண் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகும் பரிதாப நிலையே ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. நுகர்வோர் உரிமையினையும், நீதியினையும் பாதுகாக்கவும், அவர்களது பாதிப்புகளை போக்கிடவும் மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்படுவதன் மூலமே உறுதிபடுத்திட இயலும். எனவே குமரி மாவட்டத்தில் செயல்படும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தினை நெல்லைக்கு மாற்றும் திட்டத்தினை கைவிட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் E.சுரேஷ், தென்மண்டல அமைப்புச்செயலாளர் Dr.S.நாகராஜன், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் P.சந்திரா, குமரி (கிழக்கு) மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் R. சாராபாய், அமைப்பு செயலாளர் C.V.முருகன், குமரி (மத்திய) மாவட்ட தலைவர் ஐ.கென்னடி, செயலாளர் D. தேவதாஸ், அமைப்பு செயலாளர் V.கோபாலகிருஷ்ணன், குமரி (மேற்கு) மாவட்ட தலைவர் புதுக்கடை C பாண்டியன், துணைத் தலைவர் பேரா. C.மோகன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.