Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

தமிழகத்தில் காலிப்பணியிடம் நிரப்படாத நிலையில் வழங்கப்படும் குடிநீர் தரச்சான்றில் குளறுபடி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

காலிப்பணியிடங்களுடன் குடிநீர் தரப்பரிசோதனை நடைபெறுவதால் தரச்சான்றின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி

தமிழகத்தில் நகர்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடம் குடிநீர் கட்டணத்தை வசூலித்து குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. அதனை பொது சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தலைமை நீர் பகுப்பாய்வகங்கள் ஆண்டுக்கு மூன்று முறை குடிநீர் தரப்பரிசோதனை செய்கிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மட்டும் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமே 38 மாவட்டங்களில் உள்ள 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 490 பேருராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகளின் குடிநீர் தரப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ரூ4000 கட்டணம் செலுத்தி குடிநீர் தரச்சான்று பெற்று வருகின்றன.

மத்திய தணிக்கைத் துறை அறிக்கையின் படி தமிழகத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் மலக்கழிவு கலந்த குடிநீர் ரயில் பயணிகளுக்கு விநியோகம் செய்தது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் அளித்து உள்ள வழிகாட்டுதல்கள் படி பொதுசுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் நீர் பகுப்பாய்வகங்கள் குடிநீர் தரநிர்ணயம் செய்வது அடிப்படையானது. அத்தியாவசியமானது. தற்போதுள்ள சூழலில் நகர்மயமாக்கம், ஆலை மற்றும் வீடுகளின் கழிவு நீர் கலப்பால் நீர்நிலைகள் மாசுபட்டு அதனை பயன்படுத்துவோர் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. நீர் மாசு காரணமாக ஆண்டுதோறும் பலர் இறக்கின்றனர். இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்குவது அடிப்படை கடமையாகும். இந்நீரின் தரத்தை உறுதி செய்வதில் இப்பகுப்பாய்வு மையங்களின் பங்கு முக்கியமானது.

தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் தகுதியினை 4 மையங்கள் மட்டுமே நிர்ணயித்து வரும் நிலையில் இப்பணி முறையாக நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. குறிப்பிட்ட 4 தலைமை நீர் பகுப்பாய்வகங்களிலும் கீழ்நிலையில் இருந்து மேல்நிலை வரை 124 பணி இடங்கள் மட்டுமே உள்ளன. அதில் 76 தொழில்நுட்ப பணி இடங்கள் காலியாக பலகாலமாக உள்ளது. இச்சூழலில் கடந்த 2025 முதல் தற்போதுவரை தனியார் மூலம் 2516 பேர் கட்டணம் செலுத்தி, குடிநீர் தரச்சான்று பெற்று உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ 1 கோடியே 30 லட்சத்து 76 ஆயிரத்து 333 தொகை இதற்கென பெறப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பல ஆயிரம் மாதிரிகளின் குடிநீர் தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளதோடு குறைந்த பணியாளர்களை கொண்டு உரிய பகுப்பாய்வாளர்கள் இல்லாமலே தனியாருக்கும் பல ஆயிரம் சான்றுகள் வழங்கப்பட்டு உள்ளது. இது எந்த அளவில் சாத்தியம் என்ற கேள்வி எழுவதோடு குறிப்பிட்ட தரச்சான்றின் மீதான நம்பகத்தன்மை இல்லாததால் தரமற்ற குடிநீர் பயன்படுத்துவோர் பலவித பாதிப்புகளுக்கும் உள்ளாகும் நிலையே உள்ளது. தரச்சான்று குறிப்பிட்ட நீர் தரமாக இருப்பதாக உறுதி கூறினாலும் தகுதி அற்ற நீரே வழங்கப்படுவதால் இம்மையங்கள் வழங்கும் கண்துடைப்பான சான்றால் அப்பாவிகளே பலிகடாவாகும் பரிதாபம் இருந்து வருகிறது.

கடந்த 1923ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட பகுப்பாய்வு மையம் பின்னர் 3 இடங்களில் மட்டும் விரிவுபடுத்தப்பட்டது. உரிய பகுப்பாய்வு மையங்களோ, போதிய ஊழியர்களோ இன்றி இப்பணிகளை மேற்கொள்வது தவறுக்கு துணை போவதாகும். மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை பாதுகாப்பாக அவர்கள் பெறுவது அவர்களது உரிமை மட்டுமல்ல. அரசின் அடிப்படை கடமை என்பதை உணர்ந்து மாவட்டந்தோறும் நீர் பகுப்பாய்வு மையங்களை தொடங்கி போதிய பணியாளர்களை நியமித்து முறையாக குடிநீர் தரநிர்ணயம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது பல்வேறு வகையில் நீர் மாசுபட்டு அதனை பயன்படுத்துவோர் பலவிதங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இவ்விஷயத்தில் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டியது அவசர அவசியம்.