Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

எழுத்தாளர்களை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் புத்தகப்பூங்கா அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

எழுத்தாளர்களை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் புத்தகப்பூங்கா அமைக்க வேண்டும்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழக அரசு கடந்த 2022 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்த நிதி ஒதுக்கி வருகிறது. மாவட்டங்கள் மூன்று வகையில் பிரித்தப்பட்டு மானியம் வழங்கப்படும் நிலையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ( பபாசி) மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இக்கண்காட்சியினை நடத்தி வருகின்றன. வாசகர்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் வருடத்திற்கு ஒரு முறை 8 முதல் 12 நாட்கள் நடத்தப்படுகிறது. இது எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், வாசகர்கள் வட்டத்தை விரிவுபடுத்தவும் எந்த வகையிலும் உதவாது என்றே சொல்லலாம்.

பல்வேறு படைப்பாளர்களும் தங்கள் சொந்த முயற்சியில் நூலை அச்சிட்டு அதனை வெளியிட இயலாத நிலையில் தவித்து வருகின்றனர். இதுபோல் இலக்கிய மற்றும் எழுத்தாளர் அமைப்புகள் தங்கள் நிகழ்வுகளை நடத்த உரிய இடம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே வாசிப்பு பழக்கம் அருகி வரும் சூழலில் இத்தகைய நெருக்கடியால் தங்கள் ஆர்வத்திற்கு நிகழும் முட்டுகட்டைகளால் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டு வர இயலாமல் எழுத்தாளர்கள் தவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தை அமைக்கும் அரசு படைப்பாளர்களின் சிரமங்களை போக்கிட இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.

இத்தகைய நிலையினை போக்கிடும் வகையில் அனைத்து மாவட்ட தலைமை இடங்களில் மற்றும் நகரங்களில் புத்தக சந்தை அமைக்கப்பட வேண்டும். இங்கு வாசிப்பு இடம், சிற்றுண்டியகம், வைஃபை, புத்தக வெளியீடு மற்றும் இலக்கிய நிகழ்வுகள் நடத்தும் வகையிலான அரங்கம், புத்தக விற்பனை நிலையங்கள், கண்காட்சி அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடியதாக தினமும் செயல்படும் வகையில் இருக்க வேண்டும். இங்கு சுயவெளியீடு செய்தவர்கள், புதிய எழுத்தாளர்கள் நேரடியாக விற்பனை செய்ய போதிய இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பெரிய பதிப்பகங்களே முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யாத வகையில் உள்ளூர் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் திட்டத்தினை செயல்படுத்திட நினைத்து இருந்தார். ஆனால் அது நிறைவேறாத நிலையில் இத்திட்டத்தின் சிறு பகுதியாக கடந்த 10.6.25 ல் ரூ 1.85 கோடி செலவில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் புத்தக சந்தையினை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இதனை நிர்வகித்து வருகிறது. மாவட்ட அளவில் புத்தக பூங்கா அமைப்பதின் மூலம் உள்ளூர் எழுத்தாளர்கள் சென்னைக்கு செல்லாமலே தங்கள் நூல்களை விற்பனை செய்வதோடு, வாசகர்களை நேரடியாக சந்திக்கவும் இது உதவும்.

புத்தக வாசிப்பை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்றால் வெறுமனே கண்காட்சி மட்டும் போதாது. எழுத்தாளர் தன் ஊரிலேயே நூலை விற்கவும், வாசகனை சந்திக்கவும் நிரந்தர இடம் ஒதுக்குவதின் மூலமே இலக்கியப் பணியில் ஈடுபடுவோர் மேலும் புதிய உத்வேகத்துடன் புதிய படைப்புகளை வெளிக்கொண்டு வருவர். இதனால் தமிழ்மொழிக்கு மேலும் பல படைப்புகள் மற்றும் படைப்பாளர்கள் கிடைப்பதற்கு இத்தகைய முயற்சி அடிக்கல்லாய் அமையும். மனங்களை சீர்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது எழுத்தாளனால் மட்டுமே முடியும். அவர்களை ஊக்கப்படுத்திடவும், சிந்தனையாளர் நிரம்பிய சமூகம் உருவாகிடவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திடவும், புத்தக பூங்கா திட்டத்தினை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும்.

தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.