Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

மதுரையில் நிர்மூலமாக்கப்படும் கொண்டையம்பட்டி வண்ணாத்திக்கரடு மலை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

மதுரை கொண்டையம்பட்டி வண்ணாத்திக்கரடு மலையை கல்குவாரிகளிலிருந்து பாதுகாக்க TNSPI கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள வண்ணாத்திக் கரடு மலையில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளால் இம்மலை தொலைந்து வருகிறது. வகுத்த மலைக்கும், வண்ணாத்திக் கரடுக்கும் இடையே உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு வாடிப்பட்டி- சிட்டம்பட்டி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டு பன்றி, மலை ஆடு, முயல், தேவாங்கு, நரி, மயில் உள்ளிட்ட பல உயிரினங்கள் நடமாடுவதால் இவை சாலையினை கடக்க சுமார் 3 கோடி செலவில் வனவிலங்குபாலம் தமிழ்நாட்டிலேயே முதலாவதாக இங்கு அமைக்கப் படுகிறது. குவாரிகளின் வெடி சத்தத்தில் ஏற்கனவே விலங்குகள் இடம்பெயர்ந்த நிலையில் யாருக்காக பாலம் கட்டப்படுகிறது என தெரியவில்லை.

கனிமவிதிப்படி குவாரி அமையும் இடத்தில் இருந்து 300 அடிக்குள் கோயிலோ, ஓடையோ இருக்ககூடாது. ஆனால் குவாரி அருகாமையிலே கன்னிமார் கோயிலும், நீர்நிலை ஓடையும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய கூகுள் படத்துடன் தற்போதைய படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இப்பகுதியில் தாவர போர்வை எந்த அளவில் அழிந்து உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். இங்கு சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதோடு வனவிலங்குகள் தங்கள் வாழிடத்தை இழந்து உள்ளன. மேலும் இரையன் பட்டி/ ஆண்டிபட்டி, செம்மினி பட்டி, விராலிபட்டி, கச்சிக் கட்டி மக்கள் உடல்நலன் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

விளைநிலங்கள், ஓடைகள், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ள சூழலில் விவசாயம் செய்ய முடியாததால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. காப்புக்காடு பகுதியில் விதிமீறலுடன் இரவும், பகலுமாக தொடர்ந்து செயல்படும் இத்தகைய கல்குவாரிகளால் விரைவில் வண்ணாத்திக் கரடு மலையினை நாம் தேட வேண்டிய நிலையே உள்ளது. கடந்த 2025/ஜனவரியில் இப்பகுதியில் நடந்த ஆய்வில் விதிமீறல் கண்டறியப்பட்டு 2 குவாரிகளுக்கு ரூ15 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில் கச்சைகட்டி கிராம மக்கள் புகாரின் பேரில் 2025/ஜூன் மாதம் வண்ணாத்திக் கரடு உள்ளிட்ட 16 கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபடுவது ட்ரோன் ஆய்வில் கண்டறியப்பட்டு அவற்றை மூட SEIAA வுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது. இருப்பினும் இது எதுவுமே தங்களை கட்டுபடுத்தாது என்ற நோக்கில் இப்பகுதியில் தொடர்ந்து கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கனிமவளத்துறை அமைச்சர்.பிரபு 25.8.2026 அன்று சட்டப்பேரவையில் பேசும்போது கடந்தகால கனிம சுரண்டலால் காணாமல் போன மலைகளின் பட்டியலில் வண்ணாத்திக் கரடு மலையினையும் குறிப்பிட்டார்.

சுமார் 35 மீட்டர் உயரம் கொண்டிருந்த அந்த மலையின் 5 ஏக்கர் பகுதி வெட்டப்பட்டு மறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் படி மாநிலம் முழுவதும் 67 குவாரிகள் இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியில் உள்ள குவாரிகள் ஏனோ சேர்க்கப்படவில்லை. இதனால் இம்மலையின் நான்கு பக்கங்களிலும் உள்ள குவாரிகள் எவ்வித தங்கு தடையுமின்றி செயல்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கும், மக்கள் உடல்நலனிற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இப்பகுதியில் செயல்படும் குவாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு எஞ்சிய மலையினையாவது காக்க வேண்டும். இப்பகுதியினை வனத்துறை கட்டுப்பாட்டிற்கு மாற்றுவதோடு இங்குள்ள நீர்வழிதடங்கள், நிலத்தடி நீர் ஆதாரங்கள், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் காக்க உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

சட்டவிரோத கல்குவாரிகள், மலைகள் பாதுகாப்பு, கனிமவளச் சுரண்டல், நிலத்தடி நீர் பாதுகாப்பு, வனவிலங்குகள் வாழ்விடம்
Hill Conservation, Mining and Environmental Damage, Groundwater Conservation, Wildlife Habitat Protection, Forest Conservation Tamil Nadu