Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

கழிவுநீர் கலப்பால் அழியும் நிலையில் பார்வதிபுரம் சமஞ்சான்குளம் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

பார்வதிபுரம் சமஞ்சான்குளத்தில் கழிவுநீர் கலப்பால் ஏற்பட்டுள்ள மாசுபாடு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரம் மேம்பாலம் அடுத்து உள்ள பகுதியில் சாலையின் இருபுறமும் பரந்துவிரிந்து பார்ப்போர் கண்களை பரவசம் மூட்டி வந்த சமஞ்சான்குளம் தொலைந்து போனவர்கள் பட்டியலில் தற்போது இடம்பெற்று உள்ளது. அழகான இயற்கைச்சூழலில் அமைந்த இக்குளம் இப்பகுதி விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும் பிரதானமாக இருந்த நிலையில் தற்போது கழிவுநீர் கலப்பால் அழிவின் விளிம்பில் உள்ளது. இக்குள பரப்பு முழுவதும் அதன் அடையாளமே தெரியாத வகையில் ஆகாயத்தாமரை மற்றும் நீர் தாவரங்களின் பிடியில் குளம் புதைந்து போனது.

இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கழிவுகள் இங்கு கொட்டப்படுவதால் இக்குளம் கழிவுக்குழி போல் உருமாற்றம் ஆனது. மேலும் கழிவு நீர் கலந்து குளத்தின் நீரே உருமாற்றம் கொண்டு இதனை பயன்படுத்த இயலாத நிலையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. குடிமகன்கள் வீசிய மதுபாட்டில்கள், நெகிழி குப்பைகள், மருத்துவ, இறைச்சி கழிவுகள் என பல்வேறு கழிவுகளின் சங்கமத்தால் இந்நீர்நிலை மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பயணிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை உள்ளது.

நீர் தாவரங்கள் ஒருபுறம் ஆக்கிரமிக்க மறுபுறம் இக்குளத்தின் பகுதியினை ஆக்கிரமிப்பாளர்கள் நெருக்கி வருவதால் குளத்தின் பரப்பு வெகுவாக குறைந்து வருவதோடு வெகுவிரைவில் இருக்கும் குளமும் காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் இதன்மூலம் நீர்வரத்து பெற்ற பாசன பரப்புகள் நகர் விரிவாக்கத்தால் வீடுகளாக அவதரித்த சூழலில் இதன் விவசாய தேவை குறைந்து போனதால் இக்குளம் கண்டுகொள்ளப்படாத அனாதை குழந்தையாய் ஆதரவிற்காய் ஏங்கி நிற்கிறது.

சமஞ்சான் குளம் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதுடன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலும் காக்கப்படும் நிலையில் இக்குளத்தை புறக்கணிப்பதும், மேலும் மாசடைய செய்வதும் தடுக்கப்பட வேண்டும். எனவே நகரின் பிரதான பகுதியில் உள்ள குறிப்பிட்ட நீர்நிலையின் ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர் தாவரங்கள் அகற்றப்பட வேண்டும். மேலும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் இங்கு கலவாமல் தடுத்து இக்குளத்தினை சீரமைத்து பாதுகாத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச்செயலாளர் E சுரேஷ், தலைமை நிலையச் செயலாளர் S.ராஜ், தென்மண்டல அமைப்பு செயலாளர் Dr.S.நாகராஜன், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் P.சந்திரா, குமரி (கிழக்கு) மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் R. சாராபாய், அமைப்பு செயலாளர் C.V.முருகன், பொருளாளர் பொன்.மாரியம்மாள், துணை தலைவர் S. மைக்கேல்ராஜ், துணை செயலாளர் M.நாகராஜன், நீர்நிலைகள் பாதுகாப்பு அணிச் செயலாளர் S.பத்மனாபன், விவசாய அணிச் செயலாளர் P. கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

சமஞ்சான்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் நீர்நிலைக் கழிவுகள்
சமஞ்சான்குளத்தைச் சீரமைத்து பாதுகாக்க சமூக பொதுநல இயக்கத்தின் கோரிக்கை