சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
ராம்சார் தளங்கள் என்பது 1971ல் ஈரானின் ராம்சர் நகரில் கையொப்பமிட்ட சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் ஆகும். இவை உலகின் மிகவும் உற்பத்திதிறன் மிக்க பாதுகாக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. புலம்பெயர் பறவைகள், அரிய மற்றும் அழிந்துவரும் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் மற்றும் பல்லுயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வாழ்விடமாகவும், பறவைப் பாதைகளின் முக்கிய தங்குமிடமாகவும் திகழ்கின்றன. இவை இயற்கை கடற்பஞ்சு போல செயல்பட்டு அதிக மழையை உறிஞ்சி மெதுவாக வெளியிட்டு வெள்ள அபாயத்தை தடுக்கின்றன.
மழைநீரை நிலத்தடிக்கு செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, மாசுக்கள், ஊட்டசத்துக்கள் மற்றும் கழிவுகளை வடிகட்டி நீரை தூய்மைபடுத்துகின்றன. இதனால் நிலபரப்பின் சிறுநீரகங்கள் என இவை அழைக்கப்படுகின்றன. கடலோர ஈரநிலங்கள் அலைகள், புயல்கள், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றத்தை குறைக்கின்றன. மீன்வளம், நெல் சாகுபடி, கால்நடை தீவனம் உள்ளிட்டவற்றிற்கு ஆதாரமாக அமைகிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 20 ராம்சார் தளங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. சென்னை- பள்ளிக்கரணை சதுப்புநிலம், கடலூர்-பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள், நாகபட்டிணம்- பாயிண்ட் கலி மீர், விழுப்புரம் -கழுவேலி கடலோர உவர்நீர் தடாகம், கரைவெட்டி, கூந்தன்குளம், வேடந்தாங்கல் சரணாலயம் உள்ளிட்டவை இப்பட்டியலில் பிரசித்தி பெற்றவை.
ராம்சார் தளங்கள் என்பது பறவைகள் வாழும் இடங்கள் மட்டுமல்ல. அவை நீர் காற்று, உயிரினங்கள் மற்றும் மனித வாழ்க்கை ஆகியவற்றை இணைக்கும் மிக முக்கியமான இயற்கை கட்டமைப்பு ஆகும். அவற்றை பாதுகாப்பது என்பது நமது எதிர்கால நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை பாதுகாப்புக்கு அவசியம். ஆனால் பெரும்பாலான தளங்கள் மனித செயல்பாடுகளாலும், இயற்கை அழுத்தங்களாலும் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. கடல் மட்ட உயர்வு, கழிவுநீர் கலப்பு, குப்பை கொட்டுதல், வேளாண் ரசாயனங்கள் கலப்பு, சட்டவிரோத இறால் பண்ணைகள், சீமைக்கருவேல மரம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு தாவரங்கள், ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்டவற்றால் ஈரநிலங்கள் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகி அதன் பரப்பளவு சுருங்கி வருகின்றன.
ஈரநிலங்கள் அழிக்கப்பட்டால் வெள்ளம் மற்றும் வறட்சி அதிகரிக்கும், நிலத்தடி நீர் குறையும். பறவைகள் மற்றும் மீன் இனங்கள் அழியும். காலநிலை மாற்ற தாக்கம் அதிகரிக்கும். உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு ஈரநிலங்களை பாதுகாக்கவும், அதன் அழிவை தடுக்கவும் இது தொடர்பான பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு மாநில ஈரநிலை ஆணையம் (Tamil Nadu State wetlands Authority – TNSWA) 2017ல் வெளியான Wetlands (Conservation and Management) Rules ன் படி அமைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு 2018ல் வெளியான நிலையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட ஆணையம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆனபோதும் இதுவரையில் செயல்பாடுகள் இன்றி கும்பகர்ண உறக்கத்திலேயே உள்ளது. இதனால் குறிப்பிட்ட பணிகள் முடங்கி உள்ளதோடு ஈரநிலங்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. இதுவரையில் எவ்வித ஈரநிலமும் ஆணையத்தால் அடையாளபடுத்த படவில்லை எனவும், பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளவில்லை என புகார்கள் எழுந்த போதும் ஆணையம் இன்னும் தூக்கத்தை விட்டு எழவில்லை. அரசுத்துறைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது, ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை கண்டுகொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால் மாசுபாடு, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் ஈரநிலங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. ஆணையத்தை செயல்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது எப்போது?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

