சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மாவட்ட செயலாளர் Adv. C.M.பால்ராஜ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கி.குமரேசன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூட்டாக அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது-
குமரி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள், பொது நிகழ்வுகள், கோவில் விழாக்களில் சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகள் அமைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. காவல்துறை இதுகுறித்து கண்டுகொள்ளாத நிலையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் இத்தகையச் செயலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக முதியோர், பெண்கள், குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினர் உடலிற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில் அதிக சப்தத்தால் ஏற்படும் ஒலிமாசு காரணமாக மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதோடு இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு பல்வேறு உபாதைகளுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
ஏற்கனவே கூம்புவடிவ ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்ட போதும் இன்னும் அதனை மரக்கிளைகளிலும், உயரமான இடங்களில் அமைத்தும் பயன்படுத்தி வருகின்றனர். பயன்பாட்டில் இருக்க வேண்டிய 45 டெசிபல் அளவை விட அதிகமான சத்தம் எழுப்பும் வகையில் பெட்டிகளில் சக்திவாய்ந்த ஒலிப்பான்களை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
வழிபாட்டு தலங்களில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் இத்தகைய அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை வைத்து பயன்படுத்துவது கண்டுகொள்ளாத நிலையில் மக்கள் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பொது அமைதி சீர்குலைவதோடு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வழிவகுக்கிறது. எனவே அதிக ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்படும் ஒலிபெருக்கிகள் அமைப்பதை முழுமையாய் தடை செய்வதோடு விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.