சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
பரந்தூர் விமான நிலையத்திட்டத்திற்கு சுமார் 5746 ஏக்கர் நிலம் தேவைப்பட்ட நிலையில் இதற்கென ஏகனாபுரம் உள்பட்ட 13 கிராமங்கள் கையகப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் முப்போகம் நெல், சிறுதானியம், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளையும் வளமான விவசாய நிலமாக உள்ளது. இங்கு வசிக்கும் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெளியேறும் நிலை ஏற்பட்டது. தங்களது நிலம் இழந்தால் மாற்று வாழ்வாதாரம் இல்லாத நிலையில் இப்பகுதி மக்கள் இத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தனர்.
இத்திட்டத்திற்கு என தேர்வு செய்த பகுதியில் சுமார் 1425 ஏக்கர் பரப்பிலான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை உள்ளன. இவை சென்னைக்கு மழைநீர் சேமிப்பு, வெள்ள கட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீர் ரீசார்ஜ் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை அழித்தால் சென்னைக்கு வெள்ள ஆபத்து அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சுட்டி காட்டி வருகின்றனர்.
சென்னைக்கு 2வது விமான நிலையம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் பரந்தூர் போன்ற வளமான, விவசாய, நீர்நிலைகள் உள்ளடக்கிய பகுதியினை விமான நிலையத் திட்டத்திற்கு என தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விவசாய நிலங்களை அழித்து உருவாக்கும் வளர்ச்சி சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பை பாதிப்பதாய் அமையும்.
விவசாயம், நிலம், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வளர்ச்சியை மேம்படுத்துவதே நீடித்த நிலைத்த வளர்ச்சியாக, சரியான அணுகுமுறையாக அமையும். அந்தவகையில் விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக அரசு எடுத்துள்ள உள்ள முடிவை வரவேற்கின்றோம்.
இத்திட்டத்திற்கு என குறிப்பிட்ட பகுதியில் சுமார் 1700 ஏக்கர் அரசின் சார்பில் கையகப்படுத்தி உள்ள நிலையில் அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழில்கள் தொடங்கப்போவதாக அரசு அறிவித்து உள்ளது. மேலும் தற்போது செயல்பட்டு வரும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும், விமான நிலைய திட்டத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்யப் போவதாகவும் அரசு அறிவித்து உள்ள நிலையில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல், விவசாயம், நீர்நிலைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதற்கென இடத்தை தேர்வு செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

