Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

பராமரிப்பின்றி புதரின் அடியில் புதைந்த புளியடி பூங்கா – சமூக பொதுநல இயக்கம் புகார்.

நாகர்கோவில் புளியடி பகுதியில் பராமரிப்பின்றி புதர்காடாக மாறிய பூங்கா

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புளியடி பகுதியில் அம்ருத் திட்டம்-2017 – 20 ன் கீழ் சுமார் 1 கோடி செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இயற்கை எழில் சூழ்ந்த புத்தேரி குளத்தின் அருகாமையில் மக்கள் பொழுதுபோக்கிற்காகவும், சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையிலும் நேர்த்தியாக இப்பூங்கா கட்டப்பட்டது. இதனை அப்போது நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறையின் மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட பூங்காவில் எவ்வித பராமரிப்பு பணிகளும் செய்யப்படாததால் பூங்கா புதர் காட்டிற்குள் புதைந்து போனது.

இப்பூங்காவில் சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பயன்பாடின்றி உடைந்து போனது. மேலும் பூங்காவில் உள்ள கட்டுமானம் மற்றும் இரும்பு அலங்கார தடுப்பு கம்பிகளும் நொறிந்து போனது. புதர்காடாக காட்சி அளிப்பதால் விஷ ஜந்துக்களின் புகலிடமாக பூங்கா மாறியதால் இங்கு எவரும் அச்சப்பட்டு வராமல் புறக்கணித்தனர். இதன் விளைவாக இப்பகுதி குப்பைகள் கொட்டும் கிட்டங்கியாக உருமாற்றம் அடைந்தது. இதனால் இங்கு துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதாரபாதிப்புகளை உருவாக்கும் இடமாக இப்பூங்கா மாறிப்போனது.

பெயரில் மட்டுமே பூங்கா இருக்கிறதே ஒழிய இங்கு புதர் காடே காட்சி அளிக்கிறது. இதனால் பல லட்சம் மக்கள் பணம் விரயமாகி வருவதோடு பூங்கா மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குடிமகன்களின் கூடாரமாகவும், சமூகவிரோதிகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது. தனது பொலிவினையும், அழகையும் இழந்து பாழடைந்து இப்பூங்கா காட்சி அளிக்கிறது. மாநகராட்சி பகுதியில் புத்தேரி குளக்கரையில் சிறப்பாக அமைந்த இப்பூங்கா பலருக்கும் ஓய்விடமாக இருந்தது தற்போது இப்பூங்காவே ஓய்வு அடையும் இடமாக கவனிப்பின்றி கைவிடப்பட்டு கவலைக்கிடமாக உள்ளது.

இப்பூங்காவினை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இங்குள்ள புதர் முட்காடுகள் அகற்றப்பட வேண்டும். சிதைந்தும், இடிந்தும், உடைந்தும் உள்ள கட்டுமானப் பகுதிகளை சீரமைத்து மீண்டும் பூங்கா காண்போர் கண்களை கொள்ளை கொள்ளும் விதமாகவும், அமைதியைத் தேடி இங்கு வருபவர்கள் அச்சம் கொள்ளாத வகையிலும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தும் விதமாக இங்கு பழுதடைந்த நிலையில் உள்ள அறிவியல் பூங்காவினை புனரமைக்க வேண்டும். புளியடி பூங்காவினை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதோடு தொடர்ந்து பராமரித்து பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச்செயலாளர் E.சுரேஷ், தென்மண்டல அமைப்பு செயலாளர் Dr.S.நாகராஜன், குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் P.சந்திரா, குமரி (கிழக்கு) மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் R. சாராபாய், அமைப்பு செயலாளர் C.V.முருகன், துணை தலைவர் S. மைக்கேல்ராஜ், துணை செயலாளர் M.நாகராஜன், பொருளாளர் பொன்.மாரியம்மாள் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

பராமரிப்பின்றி புதருக்குள் புதைந்த புளியடி பூங்கா
நாகர்கோவில் புளியடி பூங்காவை சீரமைக்க கோரிக்கை
புளியடி பூங்கா புதர்காடாக மாறியது – சமூக பொதுநல இயக்கம் புகார்
ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட புளியடி பூங்கா பாழடைந்தது
புளியடி பூங்காவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை
பராமரிப்பின்றி சேதமடைந்த புளியடி பூங்கா
புளியடி பூங்காவில் புதர்கள் அகற்றி சீரமைக்க கோரிக்கை
நாகர்கோவில் பூங்கா பராமரிப்பின்றி குப்பைக் கிடங்காக மாறியது
குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலையில் புளியடி பூங்கா
புளியடி பூங்காவை பாதுகாக்க சமூக பொதுநல இயக்கம் கோரிக்கை