சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
நாகர்கோவிலில் இருந்து சுமார் 12கி.மீ தொலைவில் இரணியல் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை -இரணியல் கொட்டாரம் எனவும் தெக்கேத்தேவன் கோயிக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. வேணாடு மற்றும் திருவிதாங்கூர் மன்னர்களின் பருவகால தலைநகராக இரணியல் இருந்தது. 16ம் நூற்றாண்டு வரை அரசியல், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இது திகழ்ந்தது.பத்மனாபபுரம் தலைநகரான பின்னர் இதன் முக்கியத்துவம் குறைந்தது. கடைசியாக இங்கு உதயமார்த்தாண்ட வர்மா ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது.
இரணியல் அரண்மனை வளாகம் 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. படிப்புரம் பெரிய நுழைவாயில் கொண்டதாகவும், குதிரை மாளிகையான பிரதான அரண்மனை இரட்டை மாடி கொண்டதாகவும், முற்றம் கொண்ட திருவிதாங்கூர் பாணி கட்டிடமும், முன்பகுதியில் தர்பார் மண்டபமும் இருந்து உள்ளது. மேற்கு பகுதியில் அமைந்த வசந்தமண்டபத்தில் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட சுமார் 8.5 அடி நீளமும், 4.5 அடி அகலமும் கொண்ட மன்னரின் கட்டிலும் உள்ளது. வளாகத்தில் ஒரு சிறிய குளம் இருந்தது. மண்டபம் மரவேலைப்பாடுகளுடன், சுவரில் தாவர சாய ஓவியங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
நீண்டகாலமாக பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் கிடந்த அரண்மனையின் பெரும்பகுதி சேதம் அடைந்தது. 1956ல் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த பின் குறிப்பிட்ட பகுதி இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. சிலகாலம் அரிசி கிடங்காகவும் பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்பகுதி மேலும் பாதிப்பிற்கு உள்ளானது. இந்நிலையில் கடந்த 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்ட அரண்மனை பழமைமாறாமல் புதுப்பிக்கும் வகையில் ரூ 3.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இருந்தும் பல்வேறு தடைகள் காரணமாக பணிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஒருவழியாக 2022ல் பணிகள் தொடங்கின. பாரம்பரிய முறையில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்புக்கட்டி கலவை பயன்படுத்தபட்டு ராஜபாளையம் செங்கல் கொண்டு கட்டுமானப்பணிகள் நடந்தது.
அரண்மனைப் பகுதியில் தேக்குமரத்தால் ஆன கதவுகள், அரண்மனையில் மேல் கூரைகள் அலுமினிய ஷூட்டுகள் போடப்பட்டு அதன் மீது கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து 85 ஆயிரம் ஓடுகள் வாங்கப்பட்டு வேயப்பட்டு உள்ளது. மரவேலைகள், ஓடுகள் போடும் பணி முடிந்த நிலையில் அரண்மனையினை சுற்றி 6 அடி அகலத்தில் நடைபாதை அமைத்து அதன் மீது கூரைகள் அமைக்கும் பணி, அரண்மனையின் உள்ளே உள்ள சிறிய குளத்தின் மீது கூரை, அரண்மனையின் பின்புறம் உள்ள மன்னர்கள் ஓய்வு எடுக்கும் பகுதி புனரமைப்பு, அரண்மனையின் முன்புள்ள நுழைவாயில் கூரை அமைக்கும் பணி, அரண்மனை சுவர் பூசும் பணி உள்ளிட்டவை நடைபெற வேண்டி உள்ளது.
அரண்மனையில் கலைநயத்துடனும், நுட்பமான வேலைப்பாடுகளுடனும் பணிகள் நிறைவேற்ற வேண்டிய நிலையில் பணிக்குத் தேவையான உரியநிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் பணிகள் முடங்கிய நிலையில் உள்ளது. குமரி மாவட்டத்தின் முக்கிய வரலாற்று சான்றாகத் திகழும் இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் முடிந்தால் சுற்றுலா மற்றும் பாரம்பரிய ஆய்வுக்கு உரிய தலமாக மாறும் என்பதில் ஐயமில்லை.. எனவே தமிழக அரசு புனரமைப்பு பணிக்குத் தேவையான உரிய நிதியினை ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

