சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
ஈரோடு மாவட்டம் எலத்தூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள 37.42 ஹெக்டேர் பரப்பிலான ஏரி 21 கிராமங்களின் நீர்பிடிப்புப் பகுதியாக உள்ளதோடு விவசாயத்திற்கும், நீர் ஆதாரத்திற்கும், பல்லுயிர் வாழ்விடத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 2025ல் எலத்தூர் ஏரியினை மாநிலத்தின் 3வது பல்லுயிர் பாரம்பரியத்தளமாக அறிவித்தது. இங்கு ஆழமான நீர், ஆழம் குறைந்த பகுதி, சதுப்புநிலம், மண்திட்டுக்கள், முட்புதர், பாறை நிலங்கள் என பல்வேறு வகைப்பாடுகளுடன் காட்சி அளிப்பதால் வலசைப்பறவைகளுக்கும், உள்ளூர் பறவைகளுக்கும் இப்பகுதி சரணாலயமாக திகழ்கிறது.
அரசு மேற்கொண்ட ஆய்வின்படி இங்கு மொத்தம் 693 உயிரின வகைகள் உள்ளதாக தெரிவித்து உள்ளது. உச்ச வலசைக்காலத்தில் சுமார் 10 ஆயிரம் பறவைகள் இங்கு கூடுகின்றன. இங்கு பின்டெயில், கர்கனி, பார் – ஹெடட்கூஸ், டீல், ஷோ வெலர், வாக்டெய்ல், சாண்ட் பைப்பர் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பறவைகளும் இங்கு சங்கமிக்கின்றன. சிறிய ஈரநிலமும், சமூக பாதுகாப்பும் இணைந்தால் எப்படி ஒரு குளமும் மாநில அளவில் அங்கீகரம் பெற இயலும், பல்லுயிர் பெருக்கத்திற்கு அடையாளமாய் அமைய முடியும் என்பதற்கு எலத்தூர் ஏரியே வாழும் வரலாறாய் காட்சி அளிக்கிறது.
இருப்பினும் இங்கு தஞ்சம் அடையும் புல்வெளிக் கழுகு, நதிக் காகம், பெரிய புள்ளிக் கழுகு, ஆசிய கம்பளக் கழுத்து நாரை, ஓவிய நாரை, கிழக்கு நீர்த்தாரை, கருந்தலை வெண்ணாரை, சிவந்த கழுத்து வல்லூறு, இந்திய புள்ளிக் கழுகு உள்ளிட்ட பல்வேறு அரிய பறவை இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. நம்பியூர் பகுதியில் இருந்து வரும் நீர்வழித்தடங்களில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் குளத்திற்கு வந்து சேருவதால் பறவைகளின் காதலனாக காணப்படும் எலத்தூர் ஏரி அவைகளின் எதிரியாக அவதாரம் எடுத்து வருகிறது.
சிசு, கருவேலம், வாகை மரங்களில் பாம்புத் தாரா, நீர்காகம், கொக்குகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் நிலையில் பறவைகள் தங்கும் இடங்களில் இரவு காலங்களில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடிப்பதாலும், பறவைகள் வேட்டையாடப்படுவதாலும் இப்பறவைகள் குஞ்சுகளை அடைகாக்க இயலாத நிலை ஏற்படுகிறது. மேலும் மரங்களை சட்டவிரோதமாக வெட்டுதல், மண் அள்ளுவதால் பறவைகளின் வாழ்விடம் அழிக்கப்படுகிறது. இதனால் இந்த ஏரியின் தனித்தன்மை இழந்து வருவதோடு தேடிவரும் பறவைகள் ஓடிவிடும் நிலையே உள்ளது.
வலசைப்பறவைகளின் முகவரியாய் உள்ள எலத்தூர் ஏரியினை காக்க இப்பகுதி மக்கள் பல்லுயிர் பாதுகாப்புக்குழுவினை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் அதிகரிக்கும் பாதிப்புகள் பறவைகளை வரவேற்கும் விதமாய் இல்லாமல் விரட்டுவதாகவே உள்ளது. இதனை போக்கிட ஏரியில் மாசு கலப்பதை தடுப்பதோடு நிரந்தர வனபாதுகாவலர்கள் நியமித்து இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்திட வேண்டும். இங்கு நீர்வரத்தை உறுதிபடுத்துவதோடு, நீர்தரத்தையும் இறுதிபடுத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

