சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ரூ 7 கோடி செலவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுவான உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட பகுதி நெல் மற்றும் காய்கறி சாகுபடி செய்யப்படும் நஞ்சை நிலப்பரப்பாகும். பல தலைமுறையாக விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டு வாழும் இப்பகுதியில் குறிப்பிட்ட நச்சு ஆலை அமைந்தால் இப்பகுதி முழுமையாக பாதிக்கப்படுவதோடு, இவர்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
மருத்துவக் கழிவுகள் இன்சினரேட்டர் மூலம் எரிக்கப்படும் நிலையில் இவற்றில் இருந்து வெளியாகும் புகை, கரித்தூள், டையாக்சின், ஃப்யூரான் போன்ற நச்சுப்பொருட்களால் சுவாசநோய்கள், ஒவ்வாமை, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு உருவாகும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் இதேபோன்ற ஆலைகளால் பல்வேறு பகுதி மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதுபோல் கள்ளைப் பகுதி மக்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலையே உருவாகி உள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாத பட்சத்தில் நிலத்தடி நீரில் கலந்து விவசாயத்தையும் இப்பகுதி மக்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதிக்கு மருத்து கழிவுகள் கொண்டு வரப்படும் என்பதால் கிராம சாலைகளில் போக்குவரத்து அதிகரிப்பதோடு துர்நாற்றம், உடல்நல பாதிப்புகள் உள்ளிட்டவற்றால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம். மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஊசிகள், ரத்தம் கலந்த பொருட்கள், உடல் உறுப்புகள், காலாவதியான மருந்துகள் என பல்வேறு கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாவதோடு, சுற்றுச்சூழலையும் பாதிக்கும். இதனால் இத்தகைய ஆலைகள் மூலமாக கழிவுகள் அழிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய ஆலைகள் தொழில் பூங்கா, மக்கள் வசிக்காத இடங்களில் அமைப்பதே பாதுகாப்பானது. ஆனால் கள்ளை பகுதியில் குறிப்பிட்ட ஆலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட பகுதியில் வீடுகளும், அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளும் உள்ளன. விவசாயம் சார்ந்த பகுதியாகவும் உள்ளதால் சுத்திகரிப்பு ஆலை மூலம் மண், நீர், காற்று மாசுபடும் ஆபத்தே உள்ளது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அமல்படுத்தி வரும் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் படி ஆலை அமையும் இடத்திற்கும் குடியிருப்புகளுக்கும் 500 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவை இல்லாததோடு பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக ஆலை அமைக்க முயற்சிப்பதால் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
கடந்த வாரம் இப்பகுதியில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் இத்திட்டத்தினை இப்பகுதியில் செயல்படுத்துவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர். ஆலை நிர்வாகம் இத்திட்டத்தினை நிறைவேற்ற தேவைப்படும் 45 ஆவணங்களில் 6 மட்டுமே வைத்துக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக இப்பகுதியில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையினை நிறுவிட முயற்சி செய்து வருகிறது. குடியிருப்பு மற்றும் உணர்திறன் கொண்ட பகுதியில் ஆலை அமைக்க கூடாது என்ற விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ள இத்திட்டத்தினை அரசு தடை செய்வதோடு, இப்பகுதியும், மக்களும், நிலத்தடி நீரும், விவசாயமும், வாழ்வாதாரமும் பாதிப்பு அடையாமல் காத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

