சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையின் கடைசி இயற்கை ஈரநிலம். 2022 ல் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதி சென்னையின் வெள்ளக் கட்டுப்பாடு, நிலத்தடி நீர் ஊட்டம், பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியம். வரலாற்று ரீதியாக பல ஆயிரம் ஹெக்டேராக இருந்த இந்நிலப்பரப்பு தற்போது 1247 ஹெக்டேராக சுருங்கிப்போனது. தற்போது தமிழக அரசு சார்பில் நெய்தல் மீட்டெடுப்பு மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் பெரும்பாக்கம் முதல் கல்லுக்குட்டை வரை சுமார் 3கிமீ நீளம் 6 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் இதன் உள்ளே 2கி.மீ தூர நடைபாதை ரூ 21 கோடி செலவில் அமைத்து வருகிறது.
சதுப்புநிலம் என்பது ஏரி போன்ற மூடிய நீர்தேக்கம் அல்ல. இதனை சுற்றி உள்ள பல ஏக்கர் நிலத்தில் இருந்து மழைநீர் நிலப்பரப்பில் பரவி உள்ளே வந்து பின்னர் ஒக்கியம் மடுவு – கோவளம் வழியாக கடலுக்கு செல்லும் இயற்கை வடிகால் அமைப்பாகும். சுவரும், நடைபாதையும் அமைப்பதால் இதன் இயற்கை நீரோட்டம் வெகுவாக பாதிக்கப்படும். இதனால் ஜல்லடியான் பேட்டை, பாலாஜி நகர், சாய்கணேஷ் நகர், காமகோடி நகர் வெள்ள ஆபத்தில் பாதிக்கும் சூழலே உள்ளது. பள்ளிக்கரணை 65 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் உபரி நீரை ஏற்கும் கடற்பஞ்சு போன்ற இயற்கை தகவமைப்பாகும். இங்கு வரும் நீரை தடை செய்வதால் தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, மேடவாக்கம்/துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் நிலை ஏற்படும்.
பள்ளிக்கரணையில் 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், ஊர்வன, நிலநீர் உயிரினங்கள். அரிய தாவரங்கள் உள்ளன. சதுப்பு நீர்பரப்பை கரைகளால் பிரிப்பதால் இவற்றின் வாழிட அமைப்பு மாறும் என்பதால் பல்லுயிரும் பாதிக்கப்படும். கட்டுமானப்பணிக்கு இதன் பரப்பில் இருந்தே மண் தோண்டப்படுவதால் உயிரினங்களின் வாழிடம் சிதைக்கப்படுகிறது. ஏற்கனவே மெட்ரோ தூண்கள், சாலைகள், பெருங்குடி குப்பை கிடங்கு, ஆக்கிரமிப்புகளால் நீரோட்டம், பறவைகள் வாழிடம் பாதிக்கப்படும் சூழலில் தற்போதைய நடவடிக்கை பல்லுயிர்கள் மீது தொடுக்கப்படும் போராகவே பார்க்க முடிகிறது.
ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017ன் படி ஈரநிலத்திற்குள் நிரந்தர கட்டுமானம் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அரசே ஆக்கிரமிப்புகளை செய்ய முயல்வது சட்டம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்கி வருகிறது. சதுப்புநிலம் திறந்தவெளியாக இருக்க வேண்டும். அதில் மதில்சுவர் உள்ளிட்ட கட்டுமானங்கள் அமைப்பது அதன் சூழலியல் தன்மையினையே மாற்றும். தடையற்ற நீர் பரிமாற்றத்தை தடுப்பது பல்வேறு ஆபத்துக்களை நாமே வரவழைப்பதாகும்.
தமிழ்நாட்டில் 20 ராம்சார் தளங்கள் இருந்தபோதிலும் இவற்றில் பலவற்றின் எல்லைகள் இன்னும் இறுதிசெய்யப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. இவற்றை காக்கும் மற்றும் அளவீடு செய்யும் நோக்கத்திற்கு என உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் கும்பகர்ண உறக்கத்தில் உள்ளது. பள்ளிக்கரணையில் எஞ்சிய ஈரநிலப்பரப்பையாவது காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசிய தேவையாக உள்ளது. ஆனால் அதன் நீரோட்டத்தை முழுமையாக உறுதிபடுத்தாமல், ஈரநிலப்பரப்பை எல்லை நிர்ணயம் செய்து ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பு என்ற பெயரில் சதுப்பு நிலத்தின் நீரியல் செயல்பாட்டை மாற்றினால் பாதுகாப்புப் பணிகள் தோல்வியில் போய் தான் முடியும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

