சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட வேதாந்திரி நகர் பகுதியில் இரு கிணறுகள் அமைக்கப்பட்டு இதன்மூலம் பல்வேறு பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இக்கிணறுகளின் மிக அருகாமையில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் இறந்த உடலை இப்பகுதி மக்களின் எதிர்ப்புகளையும் மீறி ஜீவசமாதி என்னும் பெயரில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொது குடிநீர் கிணறுகளில் இருந்து விதி 7(1)ன்படி 90 மீட்டருக்குள் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதோ எரிப்பதோ தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் விதி 5(1)ன்படி உரிய அனுமதியினை உள்ளாட்சி நிர்வாகத்திடம் பெற வேண்டும். ஆனால் இவ்விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக இச்செயல் நடைபெற்று உள்ளது.
இதுதொடர்பாக இப்பகுதி குடியிருப்பு மக்கள் அளித்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார் நிலத்தில் புதைத்த பின் அகற்ற எங்களுக்கு அதிகாரம் இல்லை என கைவிரித்து உள்ளனர். இவ்விஷயத்தில் ஆர்.டி.ஓ தலையிட்டு நடவடிக்கை எடுக்க இயலும் என அவர்கள் கூறியதால் இப்பிரச்னை இன்னும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.
இறந்த உடல் புதைக்கப்பட்ட இடத்தினை ஒட்டி குடிநீர் கிணறு உள்ளதால் இந்நீர் மாசுபடுவதோடு, பொதுசுகாதாரத்திற்கும், குடிநீர் பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இங்கு அங்கீகாரம் பெற்று வீட்டுமனைகளை வாங்கி மக்கள் குடியிருந்து வரும் நிலையில் இத்தகைய செயலால் இப்பகுதி மக்கள் அவதிப்படும் சூழலே உள்ளது.
எனவே குமரி மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு குறிப்பிட்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு குடிநீர் மாசுபடுவதை தடுக்கவும், மக்கள் இதனால் ஏற்படும் சிரமங்களை போக்கவும் குறிப்பிட்ட இடத்தில் உடல் புதைக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

