சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை தென்னிந்தியாவின் எல்லோரா என எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தனித்துவமான சிற்பங்கள் மற்றும் குடைவரை கோயில், கல்வெட்டுக்கள் ஆகியவையே இதற்கு காரணம். இங்குள்ள ஒற்றைக்கல் குடைவரை வெட்டுவான்கோயில் மேலிருந்து கீழாக செதுக்கப்பட்டது. 8ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையான் காலத்தில் இது எழுப்பபட்டது. இதில் சுமார் 122 சிற்பங்கள் உள்ளன.150 தீர்த்தங்கரர் புடைப்பு சிற்பங்கள் மற்றும் சுமார் 102 வட்டெழுத்து கல்வெட்டுக்கள் தென்னிந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது.
கடந்த 1990ல் இங்குள்ள மலை உச்சியின் சிலப்பகுதிகள் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2024/ஜனவரி மாதம் 21.09 ஹெக்டேர் பரப்பிலான முழு மலைக்குன்று பகுதியும் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நினைவுச்சின்னமாக அறிவிக்க திட்டமிடப்பட்டது. 100 மீ தடைப்பகுதியாகவும், 300 மீ சுற்றளவில் சுரங்க அனுமதி தடை ஆகியவை முன்மொழியப்பட்டது.ஆனால் இதுவரை குறிப்பிட்ட திட்டம் செயல்படுத்தப் படவில்லை. இதனால் இங்குள்ள தொல்லியல் சின்னங்கள் பல்வேறு அத்துமீறல்களால் பாதிப்பு அடையும் நிலை உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் முழு மலைப் பகுதியினையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
குறிப்பிட்ட மலையில் இருந்து தவறி விழுந்து ஏற்படும் மனித உயிர் இழப்புகளை தடுக்க தடுப்பு கம்பிகள் மற்றும் கைப்பிடிகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். பாதைகளை சீரமைப்பதோடு இங்கு வருபவர்களின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட வேண்டும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவோடு கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். சமண சிற்பங்கள், கல்வெட்டுகள், வெட்டுவான் கோயில் வரலாறு ஆகியவற்றை விளக்கும் பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் இங்கு நியமிக்க வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க இப்பகுதியின் சிறப்பு குறித்த தகவல் விளக்க பலகைகள் நிறுவப்பட வேண்டும்.
பாறை சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் வானிலை பாதிப்பு, அரிப்பு மற்றும் மனித சேதம் ஆகியவற்றை தடுக்க அறிவியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை. 3D ஸ்கேனிங், உயர்தர புகைப்படம், கல்வெட்டுகளின் முழு பதிவு மற்றும் டிஜிட்டல் காப்பகம் ஆகியவை இங்கு உருவாக்கப்பட வேண்டும். இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இப்பகுதியினை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும். மேலும் தனித்துவமான ஒற்றைக் கல் சிற்பம், தென்னிந்தியாவின் பெரிய சமண கல்வெட்டுத்தளம் என்ற அடிப்படையில் யுனெஸ்கோ உலகப்பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இதனை சேர்க்க வேண்டும்.
இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் பெண்துறவிகள் மற்றும் கல்வி மரபுகள் குறித்து இன்னும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும். எளிதில் இங்கு வந்து செல்வதற்கான அணுகல் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்து வதோடு ஆவணபடங்கள், இங்குள்ள வரலாறு குறித்து அதிகமாக வெளிப்படுத்துவதோடு பள்ளி மாணவர்கள் இங்கு வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க இத்தலத்தினை பாதுகாக்கவும், இதன் பெருமையினை எல்லோரும் உணரவும் அரசு உரிய நடவடிக்கைகள் செய்தாக வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

