சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சென்னை மாகாணமாய் இருந்த காலகட்டத்தில் மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு வசதியாக கடந்த 1923ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அப்போதைய சுகாதார ஆணையர் கிங் சென்னை கிண்டியில் குடிநீர் பகுப்பாய்வு மையத்தை தொடங்கினார். இம்மையம் உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீரின் தரத்தை இலவசமாக பரிசோதனை செய்து வழங்குவதின் மூலமாக மக்கள் மாசுபட்ட நீரைப் பருகுவதால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தடுக்க முடிகிறது. இதன் பின் கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் ஏற்படுத்தப்பட்டு தலைமை நீர் பகுப்பாய்வு மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களின் போதும் , உயர்நீதிமன்ற வழக்குகளுக்கும், பசுமை தீர்ப்பாய வழக்குகளுக்கும் களப்பணியை மேற்கொண்டு ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் மக்கள் சுத்தமான குடிநீர் பயன்படுத்துவதற்கு இம்மையங்கள் உதவும் கரங்களாக உள்ளது. இதன் செயல்பாடுகள் எல்லாப் பகுதி மக்களுக்கும் அத்தியாவசிய தேவை என்பதால் 38 மாவட்டங்களிலும் குடிநீர் தரநிர்ணய ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். காலிப்பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் உள்ளிட்டவை மக்களின் எதிர்பார்ப்புகள் ஆக உள்ளது.
குடிநீர் மூலம் ஏற்படும் பாதிப்புகளால் ஆண்டுதோறும் பல ஆயிரம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதோடு உயிர் இழப்புகளும் ஏற்படும் நிலையில் இவ்விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்திட வேண்டும். தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4 குடிநீர் பகுப்பாய்வு மையங்கள் பொதுசுகாதாரத்துறை இணை இயக்குனரின் நேரடி வழிகாட்டுதலின் படி எவ்வித இடையூறும் இன்றி தன்னாட்சி பெற்ற அமைப்புகளாய் சுதந்திரமாய் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் குடிநீரின் தரநிர்ணய முடிவுகள் வழங்குவதில் எவ்வித தலையீடும் இல்லாத நிலை உள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட குடிநீர் தலைமை பகுப்பாய்வு மையங்கள் மாவட்ட சுகாதார அலுவலக கட்டுப்பாட்டிற்கு கீழ் செயல்படுத்திட அரசு முடிவு எடுத்து உள்ளது. இது water Act. 1974 (Prevention and Control) க்கு எதிரானது மட்டுமல்ல, Madras Public Health Act க்கும் எதிரானது. குடிநீர் தரச்சான்று வழங்கும் சட்ட அங்கீகாரம் இல்லாத நிர்வாகத்தின் கீழ் சட்ட அங்கீகாரம் பெற்ற தலைமை நீர் பகுப்பாய்வகங்களை செய்ல்படுத்திட முயற்சிப்பது பலவித முறைகேடுகளுக்கும், தவறுகளுக்கும் பாதை அமைப்பதாகும்.
எனவே இத்தகைய தவறான முடிவை கைவிட்டு குறிப்பிட்ட பகுப்பாய்வு மையங்கள் பொதுசுகாதாரத்துறை இயக்குனரின் நேரடி வழிகாட்டுதலில் தன்னிச்சையாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உயிருடன் தொடர்பு உடைய இவ்விஷயத்தில் விஷ பரீட்சை மேற்கொள்ளாமல் அவர்களது பாதிப்புகளை முழுமையாக போக்கிடவும், குறிப்பிட்ட காலத்தில் குடிநீர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கவும் தற்போதைய சூழலில் இயலாத நிலையில் அதனை போக்கிட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தர பரிசோதனை மையங்கள் அமைக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அவசர, அவசியம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.