சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தூத்துக்குடியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 210 மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட 5 அனல்மின்நிலைய அலகுகளை மாற்றி புதிதாக 800 மெகாவாட் திறன் கொண்ட இரு அனல்மின்நிலைய அலகுகள் ரூ.20,800 கோடி செலவில் அமைக்கப்படும் என 31.8.26 அன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாக உள்ளது. காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தும் மனித செயல்பாடுகளில் முதல் இடத்தை பிடிப்பது புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு. இதனால் தான் பாரிஸ் ஒப்பந்தப்படி உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து வெளியேற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு தொழிற்சாலைகளால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இயங்கி வரும் அனல்மின் நிலையம் மூலம் சல்பர் டை ஆக்சைடு கணிசமான அளவில் வெளியேற்றி வருகிறது. இதனால் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக உள்ளதால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாய் உள்ளது. மின்நிலையத்தில் இருந்து நாள்தோறும் பல டன் அளவில் சாம்பல் வெளியேற்றப்பட்டு கடலில் கொட்டப்படுகிறது. இதனால் கடலின் ஆழம் குறைந்து போனதோடு மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இச்சாம்பலில் ஆர்சனிக், காட்மியம், லெட் போன்ற கன உலோகங்கள் உள்ள நிலையில் இதனால் மன்னார் வளைகுடாவில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகிறது. இப்பகுதியில் பவளப்பாறைகள், கடல்புல், ஆமைகள் உள்ளிட்ட உணர்திறன் மிக்க கடல்சூழல் நிலவி வருகிறது. ஆலை குளிரூட்டலுக்கு பயன்படுத்தப்படும் கடல்நீர் சூடாகி மீண்டும் கடலில் விடப்படுவதால் கடல் உயிரினங்கள் கடும் அழிவை சந்திக்கின்றன. உடன்குடி, தூத்துக்குடி அனல்மின் நிலையங்கள் மூலம் ஏற்கனவே பாதிப்புகள் உள்ள நிலையில் ஒரே பகுதியில் மீண்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையே ஏற்படும்.
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய நிலையில் 13 பேர் படுகொலைக்குப் பின் ஆலை மூடப்பட்டதால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். இந்நிலையில் இவர்களை மீண்டும் சுதந்திரமாய் சுவாசிக்க இயலாத வகையில் சுற்றுச்சூழலுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் இத்திட்டத்தினை எதிர்க்கின்றோம். ஏற்கனவே விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும் அனல்மின் ஆலையால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி வரும் நிலையில் மீண்டும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பது சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிப்பதோடு அதனால் ஏற்படும் ஆபத்துகள் பெரும் பாதிப்புகளுக்கு அஸ்திவாரமாய் அமையும்.
தமிழ்நாட்டில் காற்று மற்றும் சூரியசக்தி வளம் அதிகம். புதுப்பிக்கதக்க ஆற்றலை அதிகரிப்பதே நீண்டகால தீர்வு ஆக முடியும். காலநிலை மாற்றத்திற்கு எதிராக தமிழ்நாடு சிறந்து விளங்கும் வகையில் காலநிலை பட்ஜெட்டாக ரூ.3000 கோடி ஒதுக்கப்படும் எனவும் 2031 ஆண்டிற்குள் தமிழக பயன்பாட்டின் 50% புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் செயல்பாடே இலக்கு என நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் அறிவித்து உள்ள நிலையில் அதற்கு முரணாக திட்டங்களை செயல்படுத்திட முயற்சிப்பது நிறுத்தப்பட வேண்டும். எனவே அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட திட்டத்தை கைவிடுவதோடு ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையங்களையும் மூடுவதே சுற்றுச்சூழல் தீங்குகளுக்கு தீர்வாக அமையும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

