சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

கரிவலம்வந்தநல்லூரில் கண்டறியப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு மற்றும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க கோரிக்கை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமைந்துள்ளது கரிவலம்வந்தநல்லூர். இங்குள்ள பால்வண்ணநாதர் சுவாமி கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகும். பாண்டியநாட்டின் அக்னி தலமாக விளங்கும் இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு சுமார் 1100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்ற வரலாற்றை கொண்டது. இங்கு வைப்பாற்றின் அருகே காரிச்சாத்தான் மலை பகுதியில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்ததில் தமிழ்நாட்டில் முதல்முறையாக சங்ககாலத்தைச் சேர்ந்த சதுர வடிவ செங்கல் படிக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கீழடி, அழகன்குளம், பூம்புகார் போன்ற தளங்களின் செங்கற்களுக்கு ஒத்த பாணியில் இவை களிமண் பூச்சுடன் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கட்டுமானங்கள் பண்டைய நீர் மேலாண்மைக்கு சிறந்த சாட்சிகளாய் காட்சி அளிக்கின்றன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமத்தாழிகள் மயில் ஓவியங்களுடன் கூடிய சிவப்பு நிற பூச்சு பானை, மூடியுடன் கண்டெடுக்கபட்டு உள்ளது. மேலும் இங்குள்ள இரும்பு பொருட்கள் இப்பகுதி இரும்பு உற்பத்தி செயலாக்க மையமாக இருந்ததை காட்டுகிறது.

மதுரை-மேற்கு கடற்கரை செங்கோட்டை கணவாய் வழிப்பாதை பழங்கால வணிகப்பாதையாக இருந்து உள்ளது. 1930களில் இங்கு ரோமானிய தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கபட்டது மூலமாக தொலைதூர வர்த்தக தொடர்பை உறுதிபடுத்துகிறது. உயர்தொழில்நுட்பம், கலாச்சார நடைமுறைகள், நீர் மேலாண்மை பழந்தமிழர் நாகரிகத்தை பறைசாற்றுகின்றன. இதனால் கரிவலம்வந்தநல்லூர் கோயில் பாரம்பரியம், பண்டைய தொல்லியல் சான்றுகள் இரண்டையும் இணைத்து தமிழகத்தின் தொன்மை வரலாற்றை வெளிச்சப்படுத்தும் முகவரியாக உருவெடுத்து உள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி பாதுகாக்கப்படாததால் இங்குள்ள தொல்லியல் சான்றுகள் ஆக்கிரமிப்பாளர்களால் அழிவை சந்திக்கும் நிலையில் உள்ளது. எனவே குறிப்பிட்ட தளத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளமாக தமிழக அரசு அறிவிப்பதோடு இதன் 200 மீட்டர் சுற்றளவில் எவ்வித கட்டுமானம், விவசாயம் மற்றும் கனிமவளம் எடுப்பதை தடை செய்திட வேண்டும். இப்பகுதியில் வெளிநபர்கள் அத்துமீறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

செங்கல் கிணறு போன்ற கட்டமைப்புகளை பாதுகாத்து அதனை திறந்தவெளி அருங்காட்சியமாக ஆக்க வேண்டும். கார்பன் டேட்டிங், மண் பகுப்பாய்வு, 3D மேப்பிங் போன்ற நவீன முறையில் மேலும் அகழ்வாய்வு செய்து இதனை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்திட வேண்டும். குறிப்பிட்ட பணிகளுக்கு என தமிழக பட்ஜெட்டில் உரிய நிதியினை ஒதுக்கீடு செய்து பணி தொய்வு ஏற்படுவதை தடுப்பதோடு இப்பகுதி அகழ்வாய்வு அறிக்கை வெளியிடப்பட வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட பகுதியில் வந்து கண்டு செல்லும் வகையில் கல்வி சுற்றுலாவில் இப்பகுதியினையும் இணைத்திட வேண்டும். கீழடிக்கு அடுத்த தொல்லியல் தளமாக கருதப்படும் கரிவலம்வந்த நல்லூர் பல வரலாறுகளை தனக்குள் புதைத்துள்ள நிலையில் அதனை அழியாமல் பாதுகாப்பது நமது நடவடிக்கையில்தான் இருக்கிறது.

கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் தளத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எப்போது?
சங்ககால சின்னங்களை காக்க வலியுறுத்தும் சமூக பொதுநல இயக்கம்
கரிவலம்வந்தநல்லூரின் 2500 ஆண்டு பழமையான வரலாறு ஆபத்தில்
கீழடிக்கு அடுத்த முக்கிய தொல்லியல் தளமாக கரிவலம்வந்தநல்லூர்
கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியிடப்படுமா?
தமிழகத்தின் தொன்மை வரலாற்றை பேசும் கரிவலம்வந்தநல்லூர்
சங்ககால செங்கல் படிக்கிணறை பாதுகாக்க கோரிக்கை
கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்கள் அழிவின் விளிம்பில்
திறந்தவெளி அருங்காட்சியகமாக மாறுமா கரிவலம்வந்தநல்லூர்?
தமிழக பாரம்பரியத்தை காக்க கரிவலம்வந்தநல்லூர் பாதுகாக்கப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *