சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சுரைக்காய்பட்டி கிராமத்தை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் 15ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட புலிக்குத்தி வீரரின் சிலை மற்றும் மண்டபம் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்த நிலையில் கிராமங்களுக்குள் நுழையும் புலிகள் ஆடு,மாடுகளைக் கொன்றன. இந்த புலிகளை வேட்டைக்கு சென்று குத்தி கொன்ற வீரனுக்கு நடுகல் அமைத்து புலிக்குத்திசாமி என அக்காலத்தில் அழைத்து வழிபட்டு உள்ளனர். இது பழங்கால வீரநடுகல் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மூளிப்பட்டி மற்றும் ராஜபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பல்வேறு நடுகற்கள் ஒரே இடத்தில் உள்ளதும், மண்டபம் அமைக்கப் பட்டதுமாக உள்ள சிறப்புகள் இங்கு தவிர வேறு எங்கும் காணப்படவில்லை. இதனால் தனித்தன்மை கொண்டதாக இவை விளங்குவதோடு இங்குள்ள பல்வேறு சிற்பங்கள் கலை மற்றும் கலாச்சாரத்தின் கண்ணாடியாக திகழ்கின்றன.
நடுகற்கள் வீரர்களின் தியாகத்தை நினைவூட்டும் முக்கிய சின்னங்கள்.
முதல் பல்லவர் காலம் வரை வீரர்களை தெய்வமாக வழிபடும் மரபு இருந்தது நமது சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகிறது. மேலும் நடுகற்கள் தமிழர்களின் வீரம், அறநெறி, தியாகம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துகிறது. காலத்தால் பழமை வாய்ந்த இத்தகைய கருவூலங்கள் கண்டுகொள்ளப்படாத நிலையில் அழிந்து வருகிறது.
இப்பகுதியில் உள்ள மண்டபம் பராமரிப்பின்றி, பாழடைந்து உள்ளதோடு பல்வேறு பகுதிகள் இடிந்த நிலையில் காணப்படுகிறது. ஏனைய பகுதிகளில் மேற்கூரையில் மரங்கள் வளர்ந்து அதன் வேர்கள் கட்டுமானங்களில் பரவி எஞ்சி நிற்கும் மண்டபமும் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இதனால் இதன் வரலாறு பாதுகாக்கப்படாமல் புதைமேடாகும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
அந்திம காலத்தை எதிர்நோக்கி உள்ள இத்தகைய வரலாற்றுச் சின்னங்கள் காக்கபட வேண்டியது அவசியம். இதனை பராமரித்து பாதுகாப்பதோடு தொல்லியல் துறையினர் இப்பகுதியினை ஆய்வு செய்திட வேண்டும். ஏற்கனவே குறவன் கோட்டையில் வட்ட கற்கள், முதுமக்கள் தாழி கண்டறிய பட்ட நிலையில் சுரைக்காய் பட்டி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக திகழ்கிறது.எனவே இப்பகுதியில் தமிழக அரசு உரியமுறையில் ஆய்வு நடத்தினால் காலம் மறைத்த பல உண்மைகள் தெரிய வரலாம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply